15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நாளையும், நாளை மறுநாளும் பெங்களூருவில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெறுகிறது. ஏலப்பட்டியலில் 220 வெளிநாட்டவர் உள்ளிட்ட மொத்தம் 590 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இந்தநிலையில், ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகள் எடுக்க விரும்பும் ஆல்- ரவுண்டர்கள் பற்றிய விவரங்களை காண்போம்...
மும்பை இந்தியன்ஸ் :
மிட்செல் மார்ஷ் : கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியா அணி 2021 டி20 உலகக் கோப்பை வெற்றியை பெற முக்கிய பங்கு வகித்த மிட்செல் மார்ஷை மும்பை இந்தியன்ஸ் அணி எடுக்க திட்டமிட்டுள்ளது. தற்போது மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு அகமதாபாத் அணியில் எடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக மாற்று வீரராக களமிறக்கப்படலாம்.
ஷர்துல் தாகூர் : கடந்த சீசனில் சென்னை அணிக்காக விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, சிஎஸ்கே அணி நான்காவது ஐபிஎல் பட்டத்தை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் ஷர்துல் தாகூர். மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால், ஷர்துலை எடுக்க அந்த அணி தீவிரம் காட்டலாம்.
குஜராத் டைட்டன்ஸ் :
க்ருணால் பாண்டியா : மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய பங்கு வகித்த க்ருனால் பாண்டியா சமீபத்தில் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரைப் போன்ற ஒரு ஆல்-ரவுண்டர் முக்கியமான தருணங்களில் அணிக்காக விக்கெட்டுகளைப் பெறுவது மட்டுமின்றி, தேவைப்படும்போது ஏராளமான ரன்களையும் எடுக்க கூடியவர். எனவே, குஜராத் டைட்டன்ஸ் அணி க்ருனால் பாண்டியாவை எடுக்க முயற்சிக்கும்.
முகம்மது நபி: ஆப்கானிஸ்தானின் முன்னணி ஆல்-ரவுண்டர் முகமது நபியை எடுக்க குஜராத் டைட்டன்ஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது.
பஞ்சாப் கிங்ஸ் :
ஜேசன் ஹோல்டர்: வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டி20 வடிவத்தில் மேற்கிந்திய தீவுகளுக்காக சமீப காலங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்தார்.மேலும், ஐந்து போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அணி ஜேசன் ஹோல்டரை எடுக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்.
அதேபோல், மும்பை அணியின் ஆல் - ரவுண்டராக இருந்த க்ருனால் பாண்டியாவை எடுக்க பஞ்சாப் கிங்ஸ் அணி முயற்சி செய்து வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
லியாம் லிவிங்ஸ்டன்: இங்கிலாந்து அணியில் சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஆல்-ரவுண்டர் லிவிங்ஸ்டனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவம் துபே: கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சிவம் துபேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுக்கலாம் என்று தெரிகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
வனிந்து ஹசரங்கா : கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக விளையாடிய வனிந்து ஹசரங்கா மீண்டும் அதே அணியில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்ஷல் படேல்: கடந்த சீசனில் பெங்களூர் அணிக்கு சிறப்பாக விளையாடிய ஹர்ஷல் படேலை எடுக்க பெங்களூர் அணி திட்டமிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை அணியை பொறுத்தவரை தீபக் சகார், ஜேசன் ஹோல்டர்,வனிந்து ஹசரங்கா மற்றும் ஷர்துல் தாகூரை அணியில் எடுக்க முயற்சி மேற்கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்