ஐ.பி.எல். 2022ம் ஆண்டிற்கான ஏலம் ஓரிரு தினங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்று முடிந்துள்ளது. அதிகபட்ச விலையாக மும்பை வீரர் இஷான் கிஷானை ரூபாய் 15.5 கோடி அளித்து மும்பை அணியே தக்கவைத்துள்ளது. ஏலத்தில் பல வீரர்களும் கோடிக்கணக்கான தொகைக்கு விலைபோகியுள்ளனர். இந்த நிலையில், வீரர்களின் கைக்கு எவ்வளவு தொகை போகும் என்று கேள்வி எழுந்துள்ளது.
ஏலத்தில் வீரர்களை எடுக்கும் முழுத் தொகையும் அவர்களுக்கு சென்று சேராது. நாட்டின் குடிமக்கள் செலுத்தும் வரியைப் போலவே, ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்களும் அவர்கள் எடுக்கப்பட்ட தொகையில் இருந்து வரி செலுத்த வேண்டும். ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களுக்கான தொகையில் இருந்து டி.டி.எஸ். எனப்படும் வரி கழிக்கப்படும். மொத்த தொகையில் 10 சதவீதம் டி.டி.எஸ். ஆக கணக்கிடப்பட்டு கழிக்கப்படும். மேலும், வீரர்கள் வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டும். எனவே, வீரர்கள் தங்களது நிகர வருமானத்தின் அடிப்படையில் வரி செலுத்துகின்றனர். அவர்களுக்கு கணக்கிடப்படும் டி.டி.எஸ். ஆனது ஏலத்தொகையின் அடிப்படையிலே கணக்கிடப்படுகிறது.
இந்த விதிகள் அனைத்தும் ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்களுக்கு பொருந்துமா? என்று சந்தேகம் எழும். இந்த விதிகள் அனைத்தும் வெளிநாட்டு வீரர்களுக்கு பொருந்தாது. ஐ.பி.எல். ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் அவர்களுக்கு இந்தியாவில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். அவர்கள் இந்திய வீரர்களைப் போல வருமான வரித்தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
ஐ.பி.எல். மூலமாக வீரர்களுக்கு எவ்வளவு பணம் அவர்களது கைக்கு கிடைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ள ஆடிட்டர் சவ்ரப் சர்மா, “வரி விலக்குக்கு பிறகு எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளனர் என்பதை சரியாக மதிப்பிடுவது கடினம். ஏலத்தொகை என்பது அவர்களின் அடிப்படை விலை. வீரர்கள் அவர்கள் ஆடும் அணியுடன் பல்வேறு வகையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பார்கள்.
அந்த ஒப்பந்தத்தின்படியே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. களத்தில் இறங்கும் 11 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் அவர்களுக்கு தனியாக ஊதியம் வழங்கப்படும். இதனால், அவரவர் தாங்கள் ஆடும் அணி நிர்வாகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலே அவர்களுக்கு பணம் கையில் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்