ஐபிஎல் (IPL 2022) தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்கியது. ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஏலத்திற்கான அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் தொகையைத் தொடக்க விலையாக 48 வீரர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், 1.5 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 20 வீரர்களும், 1 கோடி ரூபாய் தொடக்க விலையோடு 34 வீரர்களும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில், தினேஷ் கார்த்திக்கை எடுக்க சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஐபிஎல் வரலாற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தினேஷ் கார்த்திக்கிற்காக முதல் முறையாக போட்டியிட்டது. ஆனால், இறுதியில் பெங்களூரு அணி 5.5 கோடி ரூபாய்க்கு தினேஷ் கார்த்திக்கை வாங்கியது.
ஐபிஎல் வரலாற்றில், 6 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி இருக்கிறார் தினேஷ் கார்த்திக். 36 வயதான அவர், ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட சென்னை அணிக்காக விளையாடியதில்லை. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில், 2 கோடி ரூபாய் ஆரம்ப விலையை தனக்கு நிர்ணயித்து கொண்டு களத்தில் இறங்கினார்.
சமீபத்தில் சென்னை அணியில் இணைய விருப்பம் தெரிவித்திருந்த தினேஷ் கார்த்திக்,“நான் தேர்வு செய்யப்பட்டிருக்கும் அணிக்காக மட்டுமல்லாது, எனது மன நிறைவுக்காகவும் விளையாடுவேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் சிறப்பாக இருக்கும். என்னுடைய சொந்த ஊர் சென்னை. ஐபிஎல் போன்ற முக்கியமான தொடர்களில், உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை எதிர்த்து விளையாட வாய்ப்பு கிடைக்கும். அதனால், எந்த அணிக்காக விளையாடினாலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த இருக்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: IPL Mega Auction 2022 : ஐபிஎல் ஏலத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு குறைந்த மவுசு..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்