ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பெற்ற அணியும், தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட ஒரு அணியாக திகழ்வதும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும். ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் அடுத்தாண்டு தொடருக்கு தயாராகி வரும் நிலையில், சிஎஸ்கே-வும் தயாராகி வருகிறது.

Continues below advertisement

ஐபிஎல் 2026:

டிசம்பரில் மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரில் பல அணிகளும் வீரர்கள் மாற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கருதப்படுகிறது. சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வயது, உடற்தகுதியை கருத்தில் கொண்டு அவர் அடுத்தாண்டு விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அவருக்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்க சென்னை நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. 

சாம்சனுக்கு பதில் ஜடேஜா:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது கேப்டனை தாங்கள் தாரை வார்க்க வேண்டும் என்றால் ரூபாய் 18 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள மற்றொரு வீரரை தங்களுக்குத் தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. அந்த வீரர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா ஆவார்.

Continues below advertisement

இந்த தகவல் இணையத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்த தகவலால் சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஏனென்றால், சென்னை அணிக்காக பல நெருக்கடியான நேரத்தில் வெற்றியைத் தேடித்தந்தவர் ஜடேஜா. குறிப்பாக, 2023ம் ஆண்டு சென்னை அணி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி சென்னைக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தவர் ஜடேஜா.

நட்சத்திர வீரர்:

ரவீந்திர ஜடேஜா 2008ம் ஆண்டு தனது ஐபிஎல் கேரியரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவே தொடங்கினார். பின்னர், அவரை 2009ம் ஆண்டு அவரை சென்னை அணி வாங்கியது. தொடக்க சீசன்களில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், பின்னர் கடந்த பல சீசன்களாகவே சென்னை அணிக்காக அசத்தி வருகிறார். 

சென்னை அணி நிர்வாகம் சாம்சன் போன்ற தரமான வீரரை வாங்க வேண்டும் என்றால் அதற்கு நிகரான தொகையை வழங்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், ராஜஸ்தான் அணி தொகையாக அல்லாமல் வீரராக வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளனர் என்றே கூறப்படுகிறது. 

ஐபிஎல்-லில் அசத்தல்:

36 வயதான ஜடேஜா 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் ஆடி வருகிறார். அவர் இதுவரை 254 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 198 இன்னிங்சில் பேட் செய்து 3 ஆயிரத்து 260 ரன்கள் எடுத்துள்ளார். 5 அரைசதம் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்துள்ளார். 81 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மட்டும் 225 இன்னிங்சில் பந்துவீசியுள்ளார். அதில் 170 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.  அதிகபட்சமாக ஒரு போட்டியில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 3 முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்த தகவலால் சென்னை அணியை ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். இதற்கு முன்பு சென்னை அணியில் இருந்து ரெய்னா கழட்டிவிடப்பட்டு அவரை ஏலத்தில் ஒருவர் கூட எடுக்காமல் விற்பனையாகாத வீரராக மாறினார். பின்னர், அவர் அனைத்து வடிவ போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தோனிக்கு பதிலா சாம்சன்?

சாம்சன் இந்திய அணிக்காக பெரியளவு ஆடாவிட்டாலும் ஐபிஎல் தொடரில் நட்சத்திரமாக உள்ளார். தோனி ஐபிஎல் காலம் ஏறத்தாழ முடிந்துள்ள நிலையில், 30 வயதான சாம்சன் அணிக்கு வருவதால் அடுத்த 6 ஆண்டுகள் அந்த அணிக்கு நிரந்தரமான விக்கெட் கீப்பர் இருப்பார் என்று அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. சாம்சன் 176 ஐபிஎல் போட்டிகளில் 172 போட்டிகளில் பேட் செய்து 4 ஆயிரத்து 704 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 26 அரைசதங்கள், 3 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 119 ரன்கள் எடுத்துள்ளார்.