ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் நடந்து வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் இளம் வீரர்களை மையம் வைத்து களமிறங்கியது. ஏனென்றால், கடந்த சில சீசன்களில் குறிப்பாக கடந்த சீசனில் இளம் வீரர்கள் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினர். 

Continues below advertisement

யார் இந்த மங்கேஷ் யாதவ்?

ஒவ்வொரு அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இளம் வீரர்களே திகழ்ந்தனர். இதன் காரணமாகவே இந்த சீசனில் இளம் வீரர்கள் மீது ஒவ்வொரு அணி நிர்வாகமும் அதிகளவு கவனம் செலுத்தியது. இந்த மினி ஏலத்தில் ஆர்சிபி அணி வெங்கடேஷ் ஐயரை 7 கோடி ரூபாய்க்கு எடுத்த நிலையில், இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடாத மங்கேஷ் யாதவை ரூபாய் 5.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. 

மங்கேஷ் யாதவ் 2002ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பிறந்துள்ளார். இளம் வீரரான இவர் ஆல்ரவுண்டர் ஆவார். மத்திய பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட இவர்  சையத் முஷ்டாக் அலி மற்றும் மத்திய பிரதேச லீக் தொடரில் சிறப்பாக ஆடியதால் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.  மேலும், மத்திய பிரதேச தொடரில் இவர் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருடன் இணைந்து ஆடியதும் குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

என்ன காரணம்?

இடது கை வேகப்பந்துவீச்சாளர் இவர் ஆவார். இந்தாண்டு நடந்த மத்திய பிரதேச டி20 கிரிக்கெட்டில் 6 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எகானமி 8 வைத்துள்ளார். யார்க்கர் பந்துவீசுவதில் இவர் சிறப்பானவர் என்பதால் இவரை ஆர்சிபி அணி 5.20 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

மங்கேஷ் யாதவ் டெயிலண்டரில் சிறப்பாக பேட்டிங் செய்யும் ஆற்றல் கொண்டவர். சையத் முஷ்டாக் அலி தொடரில் ஒரே ஒரு போட்டியில் 28 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். ஆர்சிபி அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளரான யஷ் தயாள் மீது காதல் விவகாரத்தில் இளம்பெண்ணை ஏமாற்றிய போக்சோ வழக்கு அவர் மீது உள்ளது. 

இதனால், அவர் வரும் ஐபிஎல் தொடரில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவரை அணியில் தக்க வைத்தபோதே பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த சூழலில், வரும் தொடரில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவே ஆகும். ஆர்சிபி அணியில் புவனேஷ்வர், ஹேசில்வுட் பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவார்கள். நுவன் துஷாரா தனக்கு கிடைத்த வாய்ப்பை பிரகாசமாக கடந்த முறை பயன்படுத்திக் கொண்டார். இடது கை வேப்பந்துவீச்சாளராக யஷ் தயாள் மட்டுமே இருப்பதால் அவருக்கு பதிலாக மங்கேஷ் யாதவை பயன்படுத்த ஆர்சிபி திட்டமிட்டுள்ளது.

ஆர்சிபி அணி ஏலத்தில் வெங்கடேஷ் ஐயர், மங்கேஷ் யாதவ் மட்டுமின்றி ஜேக்கப் டூஃப்பி, சாத்விக் தேஸ்வால் ஆகியோரையும் ஏலத்தில் ஆர்சிபி எடுத்துள்ளது.