அடுத்தாண்டு 2026 ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான மினி ஏலம் இன்று நடந்தது. இந்த ஏலத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா அணி 64.30 கோடியுடனும், சென்னை அணி 43.40 கோடியுடனும் சென்ற நிலையில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16.40 கோடியுடன் களத்தில் இறங்கியது. 

Continues below advertisement

ஆர்சிபி எடுத்த வீரர்கள்:

ஆர்சிபி அணி மீது இந்த மினி ஏலத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்த ஐபிஎல் தொடரில் ஆடுவதற்கான ப்ளேயிங் லெவன் தயாராக உள்ள நிலையில் மாற்று வீரர்களுக்காகவே இந்த ஏலத்தில் ஆர்சிபி அணி முக்கியத்துவம் அளித்தது. 

வெங்கடேஷ் ஐயர்

Continues below advertisement

ஜேக்கப் டஃபி

சாத்விக் தேஸ்வால்

மங்கேஷ் யாதவ்

ஜோர்டன் காக்ஸ்

விக்கி ஆஸ்த்வால்

கனிஷ்க் செளகான்

விகான் மல்ஹோத்ரா

1. வெங்கடேஷ் ஐயர்:

கொல்கத்தா அணிக்காக அறிமுகமாகி ஐபிஎல் போட்டிகளில் அபாரமாக ஆடி இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றவர். கடந்த 2024 சீசனில் சிறப்பாக ஆடி கொல்கத்தா கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடந்த சீசனில் சரியாக ஆடாத காரணத்தால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரை பெங்களூர் 7 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. வெங்கடேஷ் ஐயர் இதுவரை 61 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1468 ரன்கள் எடுத்துள்ளார். 1 சதம், 12 அரைசதம் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 104 ரன்கள் எடுத்துள்ளார்.

2. ஜேக்கப் டஃபி:

ஜேக்கப் டஃபி இதுவரை 38 டி20 போட்டிகளில் ஆடி 53 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் சர்வதேச டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்களில் 2வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் 19 ஒருநாள் போட்டிகளில் ஆடி 35 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 3 டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

3. சாத்விக் தேஸ்வால்:

19 வயதே நிரம்பிய ஆல்ரவுண்டர் சாத்விக் தேஸ்வால். 2007ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்த இவர் வலதுகை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஆவார். சாத்விக் தேஸ்வாலை 30 லட்சத்திற்கு ஆர்சிபி வாங்கியுள்ளது. இவர் ஆர்சிபி அணிக்காக கடந்த 4 சீசன்களாக நெட் பந்துவீச்சாளராக இருந்துள்ளார்.

4. மங்கேஷ் யாதவ்:

ஆர்சிபி அணி இளம் வீரரான மங்கேஷ் யாதவிற்கு ரூபாய் 5.20 கோடி வழங்கியுள்ளது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான அவர் மத்திய பிரதேச பிரிமீயர் லீக் டி20, சையத் முஷ்டாக் அலி டி20யில் சிறப்பாக ஆடி அசத்தியுள்ளார். யஷ் தயாள் போக்சோ வழக்கில் சிக்கியிருப்பதால் அவர் ஆடாத சூழல் ஏற்பட்டால் அவருக்கு பதிலாக இவர் களமிறங்க வாய்ப்புகள் பிரகாசம் ஆகும்.

5. ஜோர்டன் காக்ஸ்:

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் பேட்ஸ்மேன் ஆவார். 163 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 19 அரைசதங்கள் எடுத்துள்ளார். மொத்தமாக 3 ஆயிரத்து 744 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமான 139 ரன்கள் எடுத்துள்ளார். 25 வயதான இவர் மாற்று வீரராக அணியில் வைத்திருப்பார். இங்கிலாந்து நாட்டில் ஏராளமான அணிகளுக்காக ஆடிய அனுபவம் கொண்டவர். விக்கெட் கீப்பர் திறனும் கொண்ட அவர் 62 முதல்தர போட்டிகளில் ஆடி 3 ஆயிரத்து 889 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 11 சதங்கள், 14 அரைசதங்கள் அடங்கும். 

6. விக்கி  ஆஸ்த்வால்:

23 வயதான விக்கி ஆஸ்த்வால் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர். வலதுகை பேட்டிங் மற்றும் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆவார். அடிப்படையில் பந்துவீச்சாளரான இவர் 15 டி20 போட்டிகளில் ஆடி 14 விக்கெட் கைப்பற்றியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 11 போட்டிகளில் ஆடி 28 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.  இவர் டெல்லி கேபிடல்ஸ், மகாராஷ்ட்ரா, 19 வயதுக்குட்பட்ட இந்திய பி அணியிலும், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியிலும் ஆடியுள்ளார்.

7. கனிஷ்க் செளகான்:

ராஜஸ்தானைச் சேர்ந்த 19 வயது இளம் வீரர் கனிஷ்க் செளகான். வலது கை பேட்ஸ்மேன் ஆவார். பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் வலதுகை சுழற்பந்துவீச்சாளரும் ஆவார். 

8. விகான் மல்ஹோத்ரா:

இளம் வீரர் விகான் மல்ஹோத்ராவையும் 30 லட்சம் ரூபாயில் ஏலத்தில் எடுத்துள்ளனர்.

இவர்களுக்கு ப்ளேயிங் லெவனில் ஆடுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் மாற்று வீரர்களாக முக்கிய பங்கு அளிப்பார்கள் என்று கருதப்படுகிறது.