IPL 2025 Schedule: நாள் குறிச்சாச்சு! அனல் பறக்கும் ஐபிஎல் பைனல் எப்போது? எங்கு?
IPL 2025 Date: நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரின் தொடங்கும் மற்றும் முடியும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். 18வது சீசன் நடப்பாண்டு நடைபெற உள்ளது. இந்த சீசனில் ஆடுவதற்காக கடந்தாண்டு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் தங்களது பழைய அணிகளுக்கு பல வீரர்களும் திரும்பியுள்ள நிலையில், பல வீரர்கள் புதிய அணிகளுக்குச் சென்றுள்ளனர்.
ஐ.பி.எல். எப்போது தொடக்கம்?
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஐபிஎல் தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்கும் ராஜுவ் சுக்லா கூறியதாக தகவல் வெளியான நிலையில், பின்னர் மார்ச் 21ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மார்ச் 21ம் தேதி தொடங்கும் இந்த ஐபிஎல் தொடர் வரும் மே 25ம் வரை நடைபெற உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அட்டவணை இதுவரை வெளியாகாவிட்டாலும் பிசிசிஐ-க்கு நெருக்கமானவர்கள் தொடக்கப் போட்டியும், இறுதிப்போட்டியும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறியதாக கூறப்படுகிறது.
விரைவில் அட்டவணை ரிலீஸ்:
மேலும், ஐதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் குவாலிபயர் போட்டிகள் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பும்ரா மற்றும் குல்தீப் யாதவின் உடற்தகுதி காரணமாகவே இதுவரை சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமலே உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணி அறிவிப்பு வெளியான சில நாட்களிலே ஐ.பி.எல். தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்காத இந்திய வீரர்கள், வளரும் வீரர்கள் ஐ.பி.எல். தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.பி.எல். தொடரில் தங்களை நிரூபித்து இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க போராடி வருகின்றனர். இதனால், இவர்கள் வரும் ஐ.பி.எல். தொடரில் தங்களது திறமையை காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐ.பி.எல். தொடரே சி.எஸ்.கே. முன்னாள் கேப்டன் தோனிக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.