ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டது. வழக்கமாக சென்னை அணியின் வெற்றிக்கு தாரக மந்திரமாக இருப்பது அனுபவ வீரர்களே ஆவார்கள்.
சீனியர்கள் பட்டாளம்:
இந்த சீசனுக்காக நடந்த ஏலத்திலும் அஸ்வின், விஜய் சங்கர், ராகுல் திரிபாதி, தீபக் ஹுடா ஆகியோரை ஏலத்தில் எடுத்ததுடன் இந்த சீசனின் தொடக்கம் முதலே கான்வே, அஸ்வின், தோனி, ஜடேஜா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி ஆகிய அனுபவ வீரர்களுடனே சென்றனர். துபே, ரவீந்திரா, நூர் அகமது, பதிரானா போன்ற வீரர்களுக்கும் நல்ல அனுபவம் உள்ளது.
ஆனால், மற்ற அணிகள் இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு அளித்தது. இதனால், அவர்கள் தொடக்கம் முதலே தொடரில் ஆதிக்கம் செலுத்தினர். ருதுராஜ் கெய்க்வாட்டும் காயத்தால் வெளியேற தொடரில் வெளியேறியது உறுதியான நிலையில் அணியில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அணி நிர்வாகமும், தோனியும் தள்ளப்பட்டார்.
ஆயுஷ் மாத்ரே எனும் ஆயுதம்:
வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு சென்னை அணி போராடாமலே இந்த தொடரில் பல போட்டிகளில் தோற்றது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. இந்த சூழலிலே அணியில் இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டது. அப்படி அணிக்குள் வந்தவர்கள்தான் ஷைக் ரஷீத் - ஆயுஷ் மாத்ரே.
சென்னை அணி இன்றைய போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோற்றாலும் ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் விளாசினார். அவர் 48 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் இந்த ரன்களை எடுத்தார். இதில் ஷைக் ரஷீத் அவர் ஆடிய முதல் போட்டியில் ஜொலிக்க ஆயுஷ் மாத்ரே சென்னை அணியின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். 17 வயதே ஆன ஆயுஷ் மாத்ரேவை சென்னை அணி நிர்வாகம் அடுத்த நட்சத்திரமாக முன்னெடுக்கும்.
தோனிக்கு பதிலடி:
ருதுராஜ் கெய்க்வாட் அணிக்குள் வருவதற்கு முன்பு தோனி இளம்வீரர்களிடம் போதிய அளவு ஆட்டத்திறனை காணாததாலே அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார். தோனி அப்போது கூறியது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சென்னை அணி மீது இளைஞர்களுக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை தோனியின் இந்த பேச்சு இன்னும் வலுவாக்கியது.
அதன்பின்பு, அணிக்குள் வந்த ருதுராஜ் கெய்க்வாட் தனது அபார திறமையால் சென்னை அணிக்கு கேப்டனாக உருவெடுத்தார். இது இளைஞர்கள் மீது தோனியின் மீதான கணிப்பு பொய் என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்தது. இந்த தொடரிலும் தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது.
இனி இளைஞர்கள் ராஜ்ஜியம்:
இந்த சீசன்களில் தொடக்கம் முதலே இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் புறக்கணித்து வந்த சென்னை அணி தொடரை விட்டு வெளியேறுவது உறுதியான நிலையில் ஷைக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, அன்சுல் கம்போஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியது. இவர்களில் 17 வயதே ஆன ஆயுஷ் மாத்ரே தனது பேட்டால் இளைஞர்கள் மீதான தோனியின் விமர்சனம் தவறு என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.
சென்னை அணியில் இனி வரும் காலங்களில் இளைஞர்கள் பட்டாளம் ஆட்சி செய்வதை அதிகளவு காணலாம் என்று நம்பலாம். மேலும், ஜாம்பவான் தோனியும் இளைஞர்களிடம் சென்னை அணியை ஒப்படைப்பார் என்றே கருதப்படுகிறது. தோனியின் இளைஞர்கள் மீதான பார்வையை அன்று ருதுராஜ் கெய்க்வாட் மாற்றியது போல, இன்று ஆயுஷ் மாத்ரே மாற்றியுள்ளார்.