Rishabh Pant LSG: லக்னோ அணி நிர்வாகம் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.27 கோடி ஏலம் - பெரும் எதிர்பார்ப்பு
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ரிஷப் பண்டை லக்னோ அணி 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச ஏலத்தொகை இதுவாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்திய லக்னோ அணி, ரிஷப் பண்டிற்கு கேப்டன் பதவியும் வழங்கி அசத்தியது. இதனால், அவரது செயல்பாடுகள் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
டக்-அவுட் ஆகி ஏமாற்றமளித்த ரிஷப் பண்ட்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தங்களடு முதல் போட்டியில், டெல்லி அணிக்கு எதிராக பண்ட் தலைமையிலான லக்னோ அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணியில் ஷான் மார்ஷ் மற்றும் பூரானின் அதிரடி ஆட்டத்தால், ரன் மளமளவென உயர்ந்தது. இதனிடையே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்தன. அப்போது ரிஷப் பண்ட் களமிறங்க, வலுவான அடித்தளம் கிடைத்ததால் ரன் வேகத்தை தொடர அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 6 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு ரன் கூட சேர்க்காமல், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
கேப்டன்சியிலும் சொதப்பல்
பேட்ஸ்மேன் ஆக சொதப்பினாலும், 208 ரன்கள் குவித்ததால் லக்னோ அணியை நிச்சயம் வெற்றிப்பாதைக்கு வழிநடத்துவார் என பண்டை ரசிகர்கள் மீண்டும் நம்பினார்.அதற்கேற்றார் போல, 7 ரன்களை சேர்ப்பதற்குளாகவே டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், லக்னோ வெற்றி உறுதியாகிவிட்டது என பலரும் நம்பினர். ஆனால், இம்பேக்ட் பிளேயராக வந்த அசுதோஷ் சர்மா,விப்ரஜ் நிகாம் உடன் சேர்ந்து லக்னோவின் பந்துவீச்சை நாலாபுறமு சிதறடித்தார். அவர்களை தடுக்க முயன்ற ரிஷப் பண்டின் அனைத்து முயற்சிகளும் தோல்வியையே சந்தித்தன.
ஸ்டம்பிங்கை கோட்டைவிட்ட பண்ட்
கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது. சபாஸ் அஹ்மது வீசிய முதல் பந்திலேயே, மோஹித் சர்மாவை ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதையும் விக்கெட் கீப்பராக இருந்த பண்ட் கோட்டைவிட்டார். இதனால், இறுதியில் 19.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. லக்னோ அணிக்கான முதல் போட்டியிலேயே வீரராகவும், கேப்டனாகவும் பண்ட் தோல்வியை தழுவினார்.
ரூ.27 கோடி வீணா?
இதற்காகவா பண்டிற்கு ரூ.27 கோடி கொடுத்து கேப்டன் பதவியையும் கொடுத்தது என ரசிகர்கள் லக்னோ அணியை சாடி வருகின்றனர்.