IPL 2025 GT Vs MI Eliminator: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போடிட்யில், வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச் சுற்றில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும்.
இறுதிப்போட்டியில் பெங்களூரு:
லீக் சுற்றை தொடர்ந்து நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் போட்டிகள் நேற்று தொடங்கின. அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள், முதல் குவாலிஃப்பையரில் மோதின. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி, பெங்களூருவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீட்டு கட்டு சரிவதை போன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால், வெறும் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 10 ஓவர்கள் முடிவிலேயெ இலக்கை எட்டி, 8 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மும்பை - குஜராத் மோதல்:
தொடர்ந்து இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முறையே, மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. முல்லன்பூர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி, வரும் 1ம் தேதி நடைபெற உள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் விளையாட உள்ளது. தோல்வியுறும் அணி தொடரிலிருந்தே வெளியேறும். எனவே, வாழ்வா சாவா என்ற இன்றைய போட்டியில் வெற்றி பெற குஜராத் மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன.
பலம், பலவீனம்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அணிகளில் குஜராத்தும் ஒன்று. புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியுற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் அணியின் முக்கிய வீரரான பட்லர் விளையாடாதது குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தொடக்க வீரர்களான கில் மற்றும் சுதர்ஷன் நல்ல ஃபார்மில் இருந்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் நடப்பு தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சிலும் குஜராத் அணி பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணியும் தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இன்றைய போட்டியில் பிரதான பேட்ஸ்மேன்களான ரியன் ரெக்கல்டன் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் இல்லாதது, மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரை பலவீனப்படுத்தியுள்ளது. நல்ல பவுலிங் யூனிட்டை கொண்டிருந்தும் பஞ்சாபிற்கு எதிரான போடிட்யில் பெரிதும் சோபிக்கவில்லை. அதிலிருந்து மீண்டு வந்து, மும்பை அணி இன்றைய போட்டியில் சாதிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மும்பை - குஜராத் மோதல்: மைதானம் எப்படி?
நியூசண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடப்பாண்டில் இதுவரை 5 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன்படி முதல் இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 183 ஆக உள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணிகள் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்து வலுவான இலக்கை நிர்ணயிப்பதையே விரும்புவார்கள். ஆனால், நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி அதை செய்ய தவறியது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியின்போது மழைக்கு ஏதும் வாய்ப்பில்லை என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் குஜராத் அணி 5 போட்டிகளிலும், மும்பை அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக குஜராத் 233 ரன்களையும், குறைந்தபட்சமாக மும்பை அணி 152 ரன்களையும் சேர்த்துள்ளது. நடப்பு தொடரில் இந்த அணிகள் மோதிய இரண்டு போட்டிகளிலும், குஜராத் அணியே வெற்றி பெற்றுள்ளது.
உத்தேச பிளேயிங் லெவன்:
குஜராத்: சுப்மான் கில் (கேப்டன்), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், அர்ஷத் கான், ஜெரால்ட் கோட்ஸி, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
இம்பேக்ட் பிளேயர்: சாய் சுதர்சன்
மும்பை: ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), ரோகித் சர்மா, சரித் அசலங்கா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா
இம்பேக்ட் பிளேயர்: கரண் சர்மா