ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த 10 நாட்கள் இடைவெளி காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டிற்குச் சென்று விட்டனர்.
லுங்கிக்கு பதில் ப்ளெஸ்ஸிங்:
இந்த நிலையில், ஆர்சிபி அணியின் முக்கிய பந்துவீச்சாளரான லுங்கி நிகிடி தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். இதனால், அவருக்கு பதிலாக ஆர்சிபி அணி நிர்வாகம் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த மித வேகப்பந்துவீச்சாளர் ப்ளெஸ்ஸிங் முசர்பானியை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. இவரை 75 லட்சம் ரூபாய்க்கு ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
வலது கை பந்துவீச்சாளரான முசர்பானி டி20 போட்டிகளில் நன்கு ஆடிய அனுபவம் கொண்டவர். 70 டி20 போட்டிகளில் ஆடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் இவர் சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். இவர் டி20 போட்டிகள் மட்டுமின்றி 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 விக்கெட்டுகளையும், 55 ஒருநாள் போட்டிகளில் ஆடி 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த டி20 பவுலர்:
ஐபிஎல் தொடரில் இதுவரை ஆடிய அனுபவம் இவருக்கு இல்லாவிட்டாலும், ஆர்சிபி அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தால் இவர் சிறப்பாக ஆடுவார் என்று கருதப்படுகிறது. ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குறைவான வீரர்களே ஐபிஎல் தொடரில் ஆடியுள்ளனர்.
நடப்பு தொடரில் ஆர்சிபி அணி 17 புள்ளிகள் பெற்று தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது. அந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகள் இருப்பதால் அந்த போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முனைப்பு காட்டும். அது அவர்களுக்கு ப்ளே ஆஃப்பில் பக்கபலமாக அமையும்.
ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா?
ஆர்சிபி அணி தனது கடைசி 2 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுடன் மோதுகிறது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சில் ஹேசில்வுட், புவனேஷ்வர், யஷ் தயாள், சுயாஷ் சர்மா, குருணல் பாண்ட்யா, ஷெப்பர்ட் இருக்கும் நிலையில் ப்ளேயிங் லெவனில் முசர்பானிக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமே ஆகும். இவரது உயரம் இவரது பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது. இதனால், இவரை களத்தில் இறக்குவது குறித்து ஆர்சிபி அணி நிர்வாகம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் கருதப்படுகிறது. அதேசமயம் ப்ளேயிங் லெவனை மாற்றுவதும் அணிக்கும் பின்னடைவாக அமையும் என்பதால் தீர ஆராய்ந்து இவரை களமிறக்குவது குறித்து ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவு செய்யும்.
ஏனென்றால், வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் புவனேஷ்வர், ஹேசில்வுட், யஷ் தயாள் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் ஆல்ரவுண்டர் ஷெப்பர்ட்டும் வேப்பந்துவீச்சாளர் ஆவார். இதனால், முசர்பானிக்கு வாய்ப்பு மிக மிக கடினமான ஒன்றே ஆகும்.