சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2008ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டுவரை கேப்டனாக செயல்பட்டது மட்டும் இல்லாமல், ஐந்து முறை கோப்பையை வென்றும் கொடுத்துள்ளார் மகேந்திர சிங் தோனி. நடப்புத் தொடரில் இருந்து தோனி தன்னிடம் இருந்த கேப்டன்சியை இளம் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு வீரராக செயல்பட்டு வருவதுடன் அணிக்கு தேவையான ஆலோசனைகளை களத்திலும் வழங்கி வருகின்றார். 




இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என கூறப்பட்டு வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என்ற தகவலை கூறி தோனி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் விளையாடி வரும் தோனிக்கு இதுதான் கடைசி சீசன் என்ற தகவல் கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றது. 


இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் தோனி தன்னிடம் இருந்த கேப்டன்சியை ருதுராஜிடம் வழங்கியதால் தோனி நடப்புத் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் 20 ஓவர்கள் கீப்பராக செயல்படும் தோனி, அவரது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணத்தால் பேட்டிங்கில் கடைசி 4 ஓவர்களில் களமிறங்க திட்டமிட்டு விளையாடி வருகின்றார். தோனியை மருத்துவரகள் விளையாடவேண்டாம் என அறிவுருத்திய பின்னரும் அணிக்காக விளையாடி வருகின்றார். 


இந்நிலையில் சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி இ.எஸ்.பி.என் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ தோனி தனக்கு ஏற்பட்டுள்ள தசை கிழிவுக்குப் பின்னரும் பெரும் சிரமத்தினை சமாளித்து அணிக்காக விளையாடி வருகின்றார். ஆனால் தோனி பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்த்தால் எப்படியும் இன்னும் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது” எனக் கூறியுள்ளார். 


மைக் ஹஸ்ஸியின் இந்த பேட்டி தோனியின் வெறித்தனமான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், தோனி மீது பெரும் அக்கறை கொண்ட ரசிகர்கள் 42 வயதாகும் தோனி சென்னை அணிக்காக சென்னை அணியின் ரசிகர்களுக்காக இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்றால் மகிழ்ச்சிதான். ஆனால் அவரது உடல்நிலையின் மீது அவர் அக்கறை செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


தோனிக்கு பின்னால் நடக்கும் பகல் கொள்ளை


தோனியின் வெறித்தனமான ரசிகர்கள் சென்னை போட்டிக்கான டிக்கெட்டினை வாங்க இணையத்தில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு டிக்கெட்டினை வாங்குகின்றனர். ஆனால் டிக்கெட்டினை ஆன்லைனில் வாங்கமுடியாத ரசிகர்களை குறிவைத்து டிக்கெட்டுகளை அதன் அடிப்படை விலையில் இருந்து பலமடங்கு உயர்த்தி களச்சந்தையில் பலர் விற்பனை செய்து வருவதுடன், பலர் டிக்கெட் வழங்குவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றவும் செய்கின்றனர்.