17வது ஐபிஎல் தொடரின் 41 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றது. இந்த போட்டி ஹைதராபாத் அணியின் சொந்த மைதானமான ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி  பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போட்டி ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் 250வது போட்டியாகும். 


ஏற்கனவே நடப்புத் தொடரில் இரு அணிகளும் மோதிக்கொண்டதில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 287 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையையும் ஹைதராபாத் அணி பெற்றது. அதன் பின்னர் விளையாடிய, பெங்களூரு அணி இலக்கை வெறி கொண்டு துரத்தி, 262 ரன்களை எட்டியது. இதன் மூலம் ஹைதரபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் 41 பந்தில் 9 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸருடன் 102 ரன்கள் குவித்து தனது விக்கெட்டினை இழந்தார். அதேபோல் சேஸிங்கில் தினேஷ் கார்த்திக் 35 பந்தில் 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் 83 ரன்கள் குவித்து நடராஜன் பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். 


இந்நிலையில் இரு அணிகளும் இன்று மோதிக்கொள்வதால், பெங்களூரு அணி ஹைதராபாத் அணியை வீழுத்தும் என்ற நம்பிக்கையில் பெங்களூரு அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஆனால் நடப்புத் தொடரில் பெங்களூரு அணியின் பேட்டிங் அதிரடியாக இருந்தாலும், பவுலிங் மிகவும் மோசமாக உள்ளது. இதனாலே பெங்களூரு அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகின்றது. பெங்களூரு அணி தொடர் தோல்விகளால் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை கிட்டத்தட்ட இழந்துள்ளது. பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவேண்டும் என்றால், அடுத்து உள்ள அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெறவேண்டும். இதுமட்டும் இல்லாமல், ஒரு சில அணிகள் சில போட்டிகளில் தோல்வியும் சில அணிகள் வெற்றியும் பெறவேண்டும். 


ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் நடப்புத் தொடரில் மிகவும் பலமான அணியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்திற்கு ஆட்டம் பல்வேறு சாதனைகளை ஐபிஎல் வரலாற்றிலும் ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த ஆட்டத்திலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சிக்ஸர் மழை பொழியும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டு உள்ளனர்.