ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 39 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த ஐபிஎல் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் தான் இந்த ஐபிஎல் போட்டியிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ஆஸ்திரேலியா என்றால் கிரிக்கெட். கிரிக்கெட் என்றால் ஆஸ்திரேலியா. இது பிரிக்க முடியாத ஒன்று. அதோடு உலகக் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி படைக்காத சாதனைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.


பாட் கம்மின்ஸ் தலைமையில் மிரட்டல்:


அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொன்னதை செய்தார். 1 லட்சம் இந்தியர்கள் கூடி இருந்த நரேந்திர மோடி மைதானத்தை அமைதி படுத்தினார். இந்நிலையில் தான் இந்த ஐ.பி.எல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்தியன் ப்ரீமியர் லீக்கை ஆஸ்திரேலிய வீரர்கள் ஆஸ்திரேலியன் கிரிக்கெட் லீக்காக மாற்றி வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


ட்ராவிஸ் ஹெட்:


அந்தவகையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் ட்ராவிஸ் ஹெட் ருத்ர தாண்டவம் ஆடினார். வெறும் 16 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்கள் எடுத்து அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். மொத்தம் 32 பந்துகள் களத்தில் நின்ற ட்ராவிஸ் ஹெட் 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 89 ரன்கள் எடுத்தார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ட்ராவிஸ் ஹெட் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். 


மார்கஸ் ஸ்டோனிஸ்:


சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற 39 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய சி.எஸ்.கே 210 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கியது லக்னோ அணி. இந்த போட்டியில் லக்னோ அணிக்காக விளையாடிய வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தார். கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார் மார்கஸ் ஸ்டோனிஸ். அந்தவகையில் கடைசி வரை களத்தில் நின்ற ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 124 ரன்களை குவித்தார்.


ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்:


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரற் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க். இவர் இந்த ஐபிஎல் சீசனில் தான் அறிமுகமாகி இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் விளாசினார். 18 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற மெக்குர்க் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 65 ரன்களை குவித்தார். இதுவரை அவர் விளையாடிய 3 போட்டிகளில் 2 அரைசதங்கள் விளாசி அசத்தி உள்ளார். இது இந்திய ரசிகர்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவது போல் அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்கள் அதிரடியாக விளையாடுவது டி20 உலகக் கோப்பையில் எதிரொளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.