தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல் 2024) இதுவரை மயங்க் யாதவ் (LSG), ஆங்கிரிஷ் ரகுவன்ஷி (KKR), ஷஷாங்க் சிங் (PBKS), அபிஷேக் சர்மா (SRH) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். இந்த பட்டியலில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த நிதீஷ் குமார் ரெட்டியும் இணைந்தார்.
ஆந்திர பிரதேச அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் குமார், நேற்று சிக்கலில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயனுள்ள இன்னிங்ஸ் விளையாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற போட்டியில், சன்ரைசர்ஸ் அணி கடும் நெருக்கடியில் இருந்த போதிலும், நிதீஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
நேற்று கலக்கிய நிதீஷ் குமார் ரெட்டி:
ஒரு கட்டத்தில் வெறும் 39 ரன்களுக்கு 3 விக்கெட்களையும், 64 ரன்களுக்கு 4 விக்கெட்களையும் இழந்திருந்தது. அப்போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி நேற்று 32 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மேலும், அடுத்த 5 பந்துகளில் 14 எடுத்து அவுட்டானார். அதிரடியாக பேட்டிங் செய்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் 64 ரன்கள் எடுத்தார். இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அடுத்ததாக, பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 180 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
முதல் அரைசதம்:
நிதீஷ் குமார் ரெட்டி தனது நான்காவது போட்டியில் விளையாடி அடித்த முதல் அரைசதம் இதுவாகும். முன்னதாக, கடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 14 ரன்கள் எடுத்திருந்தார். இவர் இதுவரை ஐபிஎல்லில் இரண்டு இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட்டிங் செய்துள்ளார். அதேசமயம், கடந்த சீசனில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்ற இவர் ஐபிஎல்லில் அறிமுகமானார். ஆனால், அந்த இரண்டு போட்டிகளில் நிதிஸால் பேட்டிங் செய்ய முடியவில்லை.
அடிப்படை விலைக்கு வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிதீஷ் குமார் ரெட்டியை அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது. ஆந்திர பிரதேச அணிக்காக விளையாடி வரும் இவர், உள்நாட்டு கிரிக்கெட்ட்டில் 17 வயது மற்றும் 22 வயதுக்குட்பட்ட லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார். இது தவிர, அந்த அணிக்காக 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
லிஸ்ட் ஏ கேரியர்:
முதல் தர போட்டியில் 1 சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 566 ரன்கள் எடுத்துள்ளார். லிஸ்ட் ஏயில் 4 அரைசதங்களுடன் 403 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் இதுவரை 170 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முதல் தர போட்டியில் 52 விக்கெட்டுகளையும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 14 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.