ஹைதரபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி எண்ட்ரீ கொடுத்தது பற்றி அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறிய கருத்து ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. 


சென்னை vs ஹைதராபாத் 


17வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 18வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை எதிர்கொண்டது. ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியன் இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.


அதிகப்பட்சமாக ஷிவம் துபே 45 ரன்களும், ரஹானே 35 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 31 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் கண்ட ஹைதராபாத் அணி முதல் இரண்டு ஓவர்களில் 40 ரன்களை குவித்து மிரட்டலான ஆட்டத்தை ஆடியது. குறிப்பாக சென்னை அணியில் இம்பேக்ட் பிளேயராக பந்துவீச வந்த முகேஷ் சௌத்ரி தனது முதல் ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தார். இப்படியான சென்னை அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாத காரணத்தால் 18.1  ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. 


களம் கண்ட சென்னை சிங்கம்


நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி நேற்று தனது 4வது ஆட்டத்தில் விளையாடியது. முதல் 2 ஆட்டங்களில் களம் காணாத சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெல்லி அணிக்கு எதிரான 3வது போட்டியில் களமிறங்கி 16 பந்துகளில் 37 ரன்கள் விளாசினார். அவரின் கடைசி ஐபிஎல் தொடர் இது என கூறப்படுவதால் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு பலமாகவே இருக்கிறது. சென்னையை தவிர்த்து 9 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும் அவர்களின் சொந்த மைதானத்தில் கூட எங்கு திரும்பினாலும் மஞ்சள் காவியமாகவே உள்ளது. 






இந்நிலையில் நேற்று ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் தோனி களம் கண்டார். அவர் 2 பந்துகளை சந்தித்து 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் மைதானத்துக்குள் நுழைந்தபோது எழுந்த ரசிகர்களின் சத்தம் அடங்க வெகுநேரமானது. இதனைக் கண்டு ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “தோனி மைதானத்துக்குள் வந்தபோது கூடியிருந்த மொத்த ரசிகர்கள் கூட்டமும் செய்தது வேடிக்கையாக இருந்தது. ரசிகர்களிடம் வெளிப்பட்ட அந்த சத்தம் மிகப்பெரியதாகவும், என் வாழ்நாளில் நான் இதுவரை  கேட்காததாகவும் அமைந்தது " என தெரிவித்துள்ளார்.