நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் சார்பில் ஷிவம் துபே அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். 


அதன் பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி சென்னை அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்தது. முதல் ஓவரில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் சேர்த்தது. ஆனால் இரண்டாவது ஓவரினை வீசிய முகேஷ் சௌத்ரி ஓவரில் அபிஷேக் சர்மா மூன்று சிக்ஸர் இரண்டு பவுண்டரி விளாசி 26 ரன்கள் குவித்தார். முகேஷ் நோ பால் வீசியதால் இந்த ஓவரில் மட்டும் ஹைதராபாத் அணிக்கு 27 ரன்கள் கிடைத்தது. 


அடுத்த ஓவரில் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டினை இழந்தாலும் அதன் பின்னர் வந்த மார்க்ரம் தொடக்க வீரர் ஹெட் உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். இதனால் பவர்ப்ளேவில் ஹைதராபாத் அணிக்கு ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 78 ரன்கள் சேர்த்தது. 


இதனால் அடுத்த 14 ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 88 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. பவர்ப்ளே முடிந்த பின்னர் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களால் போட்டியில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. ஹெட் மற்றும் மார்க்ரம் தங்களது விக்கெட்டினை இழந்த பின்னர் மட்டும் ஹைதராபாத் அணி தரப்பில் கிட்டத்தட்ட 6 ஓவர்களுக்கு பவுண்டரி விளாசப்படாமல் இருக்கப்பட்டது. 


சிறப்பாக விளையாடிய மார்க்ரம் 35 பந்துகளில் தனது 5வது ஐபிஎல் அரைசதத்தினை எடுத்துவிட்டு அடுத்த பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் கைகோர்த்த க்ளாசன் மற்றும் ஷபாஸ் கூட்டணி பெரிதாக கைகொடுக்கவில்லை. ஷாபாஸ் அகமது தனது விக்கெட்டினை 19 பந்தில் 18 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 


யார் வெளியேறினாலும் களத்தில் க்ளாசன் இருப்பதால் ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் நிம்மதியாகவே இருந்தனர். அவருடன் களத்தில் இருந்த நிதிஷ் ரெட்டி நம்பிக்கை அளிக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.  கடைசி மூன்று ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இறுதியில் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.