ஒவ்வொரு ஆண்டும் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ஐபிஎல் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்த ஐபிஎல் போட்டியானது 17வது சீசனாக நடைபெறவுள்ளது. ஆனால் இந்த முறை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் 2024 இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.


தாமதம்:


இதனால் பொதுத்தேர்தல் காரணமாக ஐபிஎல் அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பொதுத்தேர்தல் தேதியை அறிவித்த பிறகு ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் போது மட்டுமே, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியின் அட்டவணையை ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவிக்கும் என்று 'பிடிஐ' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இந்தியாவிலா? வெளிநாட்டிலா?


நாடாளுமன்ற தேர்தல்கள் காரணமாக, 2024 ஐபிஎல் போட்டியின் முழு அல்லது பாதியும் இந்தியாவுக்கு வெளியே நடத்தப்படலாம் என்று பல்வேறு ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டது. இந்தியாவில் ஐபிஎல் முழுமையாக நடைபெறுமா? இல்லையா? என்பது பொதுத் தேர்தல் தேதிக்குப் பிறகுதான் முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் அதிகாரப்பூர்வ அட்டவணையை எப்போது வெளியாகும், எங்கு நடைபெறும் என்பது இப்போது சுவாரஸ்யமாக இருக்கும். 






எப்போது ஐபிஎல் 17வது சீசன் தொடங்குகிறது..? 


பிப்ரவரி - மார்ச் மாதம் நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்த பிறகு மார்ச் மூன்றாவது வாரம் முதல் மே மூன்றாவது வாரம் வரை ஐபிஎல் 2024 நடைபெற வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே, ஐபிஎல் தேதி அறிவிக்கப்படும். மேலும், 20 அணிகள் கொண்ட டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 4-30 வரை நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் 2024 மார்ச் 22, 2024 இல் தொடங்கி மே 26, 2024 அன்று இறுதிப் போட்டியுடன் முடிவடையும், குறைந்தது ஒரு வாரமாவது வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. (இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)


 டிசம்பர் 19ம் தேதி ஐபிஎல் ஏலம்: 


டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெறும் ஏலத்தில் பல முன்னணி வீரர்களின் பெயர்களை ஏலத்தில் எடுக்க போட்டா போட்டி நடக்கும். சமீபத்தில், ஐபிஎல் அணிகள் தக்கவைத்த மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் இறுதிப்பட்டியலை வெளியிட்டது. இதில், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அனைத்து அணிகளும் பல முக்கிய வீரர்களை வெளியிட்டு, இன்னும் பந்தயத்தில் வேகம் காட்ட இருக்கின்றன. 


வீரர்களை விடுவித்த பிறகு அணிகளிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?


RCB - 40.75 கோடி
SRH - 34 கோடி
KKR - 32.7 கோடி
CSK - 31.4 கோடி
PBKS - 29.1 கோடி
DC - 28.95 கோடி
MI - 15.25 கோடி
RR - 14.5 கோடி
LSG - 13.9 கோடி 
GT - 13.85 கோடி


கடந்த ஏலத்தில் (ஐபிஎல் 2023) இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் குர்ரன், 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட போட்டியின் அதிக விலை கொண்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.