ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் லீக் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. அந்தவகையில் முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அதேபோல், இதுவரை நடந்து முடிந்துள்ள 6 லீக் போட்டிகளிலும் ஹோம் மைதானத்தில் விளையாடிய அணிகள் தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது இரண்டாவது லீக் போட்டியில் இன்று (மார்ச் 26) விளையாட இருக்கிறது. அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது.
முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன்கில் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவருமே தங்களது முதல் போட்டியில் வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கின்றனர். இச்சூழலில் தான் இரு அணிகளும் இன்று மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ருதுராஜ் ஆட்டம்:
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 5 இன்னிங்ஸ்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக எப்படி விளையாடி இருக்கிறார் என்பதை பார்ப்போம்.
அதாவது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடந்த 5 இன்னிங்ஸ்களில் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 48 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 73 ரன்களை விளாசினார். அதேபோல், அடுத்து விளையாடி போட்டிகளில் 49 பந்துகளில் 53 ரன்கள், 50 பந்துகளில் 92 ரன்கள், 44 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார்.
அதேநேரம் கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 26 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த போட்டிகளில் ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய போட்டியிலும் அதே அதிரடியைக் காட்ட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். ரசிகர்களின் ஆசையை ருதுராஜ் கெய்க்வாட் நிறைவேற்றுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிக்க: IPL 2024: சென்னையை இன்று சேப்பாக்கத்தில் எதிர்கொள்ளும் குஜராத்! பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் XI விவரம் இதோ!
மேலும் படிக்க: IPL 2024 RCB vs PBKS: இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்; பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!