IPL 2024 RCB vs PBKS: இறுதியில் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக்; பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

RCB vs PBKS Match Highlights: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Continues below advertisement

17வது சீசன் ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Continues below advertisement

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளெசிஸ் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் தவான் 45 ரன்களும் கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷஷாங்க் 8 பந்தில் 21 ரன்களும் எடுத்தனர். 

அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி முதல் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரியுடன் நான்கு பவுண்டரி விளாசி அசத்தலான தொடக்கத்தினைக் கொடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டூ பிளெசிஸ் ரபாடா பந்தில் தனது விக்கெட்டினை 3 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

அதன் பின்னர் வந்த கேமரூன் க்ரீன் 3 ரன்னில் ரபாடா வேகத்திற்கு இரையானார். தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி வந்த விராட் கோலியி பஞ்சாப் பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவருன் இணைந்த ரஜத் படிதார் பவுண்டரியும் சிக்ஸரும் விளாசுவதில் குறியாக இருந்தார். இதனால் பெங்களூரு அணி ரன் சீராக உயர்ந்து கொண்டே இருந்தது. 

பவர்ப்ளேவில் பெங்களூரு அணி 50 ரன்களை எடுத்திருந்தது. அதிரடியாக ஆடி வந்த விராட் கோலி 31 பந்தில் தனது அரைசதத்தினை பதிவு செய்தார். 10 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் சேர்த்தது.  அதன் பின்னர் ஹர்மன் பரார் பந்தில் ரஜத் படிதார் மற்றும் மேக்ஸ்வெல் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். 

அதன் பின்னரும் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தார். இன்னும் சொல்லப்போனால் இரண்டு ரன்கள் எடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார். இது பஞ்சாப் அணிக்கு பெரும் குடைச்சலைத் தந்தது. போட்டியின் 16வது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் பந்தில் பவுண்டரிகளை விரட்டி வந்த விராட் கோலி அதே ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

விராட் கோலி அவுட் ஆனபோது அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரின் இரண்டாவது பந்தில் அனுஜ் ராவத் தனது விக்கெட்டினை இழக்க போட்டி பஞ்சாப் அணி கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கடைசி மூன்று ஓவர்களில் பெங்களூரு அணி சிறப்பாக பேட்டிங் செய்தது. குறிப்பாக தினேஷ் கார்த்திக் பவுண்டரி, சிக்ஸர் என ஆட்டத்தை பெங்களூரு அணி பக்கம் திருப்பினார்.  கடைசிவரை களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி அணியை வெற்றிபெறவைத்தார். இவர் 10 பந்துகளில் 3 பவுண்டரி இரண்டு சிக்ஸர் என 28 ரன்கள் குவித்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்தது. இதனால் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Continues below advertisement