இதுவரை விராட் கோலி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 7971 ரன்கள் எடுத்துள்ளார். இவர் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 29 ரன்கள் எடுத்தால் 8 ஆயிரம் ரன்களை கடப்பார். 


ஐபிஎல் 2024 சீசனானது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த ஐபிஎல் முதல் தகுதிச் சுற்று போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


இந்தநிலையில், எலிமினேட்டர் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபையர்-2ஐ எட்டும். அங்கு பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. அதேசமயம் எலிமினேட்டரில் தோற்கும் அணியானது ஐபிஎல் 2024 சீசனில் இருந்து வெளியேறும். இப்படியான சூழ்நிலையில், இன்று விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். அது என்ன சாதனை என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்..


இன்று அகமதாபாத்தில் வரலாறு படைக்கபோகும் விராட் கோலி:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 7971 ரன்கள் எடுத்துள்ளார். இவர் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் எடுத்தால் 8 ஆயிரம் ரன்களை தொடுவார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். அதே சமயம் இந்த சீசனில் விராட் கோலி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி சராசரியாக 64.36 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 155.60 என 708 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் விராட் கோலி 59 பவுண்டரிகள் மற்றும் 37 சிக்சர்கள் அடித்துள்ளார். மேலும், அதிக ரன்கள் எடுத்தவருக்கான ஆரஞ்சு கேப் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தொடந்து முதலிடத்தில் உள்ளார். 






ஒட்டுமொத்த ஐபிஎல்-லில் விராட் கோலி இதுவரை: 






 ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 251 போட்டிகளில் விளையாடி, 38.69 சராசரி மற்றும் 131.95 ஸ்ட்ரைக் ரேட்டில் 8 சதங்கள், 55 அரை சதங்கள் உள்பட 7971 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் விளையாடி வரும் விராட் கோலி, தற்போது தனது 17வது ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார். அதேபோல், ஐபிஎல் தொடங்கப்பட்டது முதலே ஒரே அணிக்காக 250க்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே வீரர் விராட் கோலி. இருப்பினும், இதுவரை விராட் கோலி தலைமையிலோ அல்லது வீரராகவோ விளையாடியபோதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை.