நடப்பு ஐபிஎல் 2024 சீசனானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சீசனின் எலிமினேட்டர் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கிறது. இந்த போட்டிய்ல் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி வரும் வெள்ளிக்கிழமை குவாலிஃபையர் 2ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கும். தோற்கும் அணி நடப்பு ஐபிஎல்லில் இருந்து வெளியேறும். 


இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஸ்டேடியம் இரு அணிக்கும் சொந்த ஸ்டேடியம் இல்லை. நடுநிலையான ஸ்டேடியமாக உள்ளது. 


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மூன்று போட்டிகளில் முடிவு இல்லாமல் போயுள்ளது. 


பிட்ச் ரிப்போர்ட்: 


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தின் ஆடுகளம் பேட்டிற்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இங்கு அதிக ஸ்கோர்கள் குவிக்கப்பட்டுள்ளன. எனவே, இன்றைய ஆர்சிபி - ஆர்ஆர் இடையிலான எலிமினேட்டர் சுற்றில் 180க்கும் அதிகமான ரன்கள் பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் சீசனில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அதிகபட்சமாக 231 ரன்கள் குவித்துள்ளனர். இந்த ஆடுகளத்தில் சராசரி ஸ்கோர் 173 ரன்கள் ஆகும். மேலும், இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களும் விக்கெட்களை வீழ்த்தவும் வாய்ப்புள்ளது. 


டாஸ் வெல்லும் அணி என்ன தேர்வு செய்ய வேண்டும் முதலில்..? 


ஐபிஎல் 2024ன் மொத்தம் 6 போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றுள்ளது. இதில், 6 போட்டிகளில் இலக்கை விரட்டிய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்ய வந்த அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், முதல் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்வது நல்லது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 


ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், யாஷ் தயாள், கர்ண் சர்மா, லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்.
இம்பாக்ட் பிளேயர் - ஸ்வப்னில் சிங்.


ராஜஸ்தான் ராயல்ஸ்: 


சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், ரியான் பராக், துருவ் ஜூரல், ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
இம்பாக்ட் பிளேயர் - டி. ஃபெரீரா.


புள்ளிப்பட்டியலில் இரு அணிகளும் எந்த இடத்தில்..? 


ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4வது இடத்திலும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3வது இடத்தில் இருக்கிறது. எனவே, இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது என்று பார்ப்போம்.