நடப்பு ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 1 போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் எனக் கூறினார். 


அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியின் அசாத்திய பவுலிங், அட்டகாசமான ஃபீல்டிங்கினால் மொத்தமாக சொதப்பியது. 19.3 ஓவர்களில் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராகுல் திருப்பாதி 35 பந்தில் 55 ரன்கள் சேர்த்திருந்தார். 



இலக்கை வேகமாக துரத்திய கொல்கத்தா 


அடுத்து 120 பந்துகளில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி முதல் ஓவரில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஹைதராபாத் அணி சார்பில் ஆட்டத்தின் 4வது ஓவரில் நடராஜன் முதல் விக்கெட்டினை கைப்பற்றினார். அதன் பின்னர் பவர்ப்ளேவில் ஹைதராபாத் அணியால் விக்கெட் கைப்பற்ற முடியவில்லை. பவர்ப்ளே முடியும்போது கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 63 ரன்கள் சேர்த்திருந்தது. 


இதனால் அடுத்த 14 ஓவர்களில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 97 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்ததால் கொல்கத்தா அணி தொடர்ந்து அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தது. 7வது ஓவரில் சுனில் நரைன் தனது விக்கெட்டினை கம்மின்ஸ் பந்தில் இழந்து வெளியேறினார். ஆனால் இது ஆட்டத்தில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 10 ஓவர்கள் முடியும்போது கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் அடுத்த 10 ஓவர்களில் கொல்கத்தாவின் வெற்றிக்கு வெறும் 53 ரன்கள்  மட்டுமே தேவைப்பட்டது. 






இறுதிப் போட்டியில் கொல்கத்தா


களத்தில் இருந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூட்டணி சிறப்பாக விளையாடி, அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்லும் பணியைச் செய்தனர். சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். இதில் தான் எதிர் கொண்ட கடைசி 4 பந்துகளில் மூன்று சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசி மிரட்டினார். 14வது ஓவரின் 4வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட ஸ்ரேயஸ் ஐயர் அணியை இறுதிப் போட்டிக்கு தகுதிபெறச் செய்தார். 13.4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்  இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா முன்னேறியுள்ளது. அதேபோல், கொல்கத்தா அணி தனது இறுதிப் போட்டியில் குலிஃபையர் 2-இல் வெற்றி பெறும் அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 26ஆம் தேதி மோதும். 




ஹைதராபாத் அணிக்கு உள்ள மற்றொரு வாய்ப்பு


கொல்கத்தா அணியிடம் தோல்வியைச் சந்தித்த ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற, எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 24ஆம் தேதி மோதும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும். நாளை அதாவது மே 22ஆம் தேதி எலிமினேட்ட்ர் சுற்றில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள், அகமதாபாத் மைதானத்தில் மோதவுள்ளது.