ஐ.பி.எல் சீசன் 17:


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஐ.பி.எல் சீசன் 17ன் 19 வது லீக் போட்டி நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தன்னுடைய 100 வது போட்டியை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் சிக்ஸர் அடித்து சதம் விளாசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


பரபர நிமிடம்:


முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. பின்னர் 184 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. அந்தவகையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களம் இறங்கினார்கள். இதில், 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி ராஜஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். பின்னர் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடி சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 42 பந்துகள் களத்தில் நின்று 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 69 ரன்களை எடுத்துக்கொடுத்தார். இதனிடையே தன்னுடைய 100வது ஐ.பி.எல் போட்டியில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார் ஜோஸ் பட்லர். 






 


சதம் விளாசிய ஜோஸ் பட்லர்:


17 வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி பெற 14 ரன்கள் தேவைபட்டது. அப்போது களத்தில் நின்ற துருவ் ஜூரல் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஷிம்ரோன் ஹெட்மியர் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். 19 வது ஓவரை பெங்களூரு அணி வீரர் முகமது சிராஜ் வீசினார். இரண்டு பந்துகளை டாட் வைத்தார். மூன்றவது பந்தில் பவுண்டரி விளாசினார் ஹெட்மியர். நான்காவது பந்தில் சிங்கிள் தட்ட கடைசி பந்தில் பட்லர் ஒரு சிங்கிள் தட்டினார். 19 வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து இருந்தது; ஜோஸ் பட்லர் 94 ரன்கள் எடுத்து இருந்தார்.






கடைசி ஓவரில் 1 ரன் எடுத்தால் வெற்றி 6 ரன்கள் எடுத்தால் தன்னுடைய ஐ.பி.எல் சதம் என்ற நிலையில் கேமரூன் கிரீன் வீசிய 20 ஓவரின் முதல் பந்தை பரபரப்பான நிமிடங்களுக்கு மத்தியில் சிக்ஸருக்கு பறக்க விட்டார் பட்லர். ராஜஸ்தான் அணி ரசிகர்களின் கர ஓசைகளுக்கு மத்தியில் தன்னுடைய 100 வது ஐ.பி.எல் போட்டியில் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியிடன் சதத்தை பதிவு செய்தார். அந்த வகையில் 58 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என மொத்த 100 ரன்களை குவித்தார் ஜோஸ் பட்லர்.