இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது ராஜஸ்தானைச் சேர்ந்த தவ்ரி தேவி என்ற பெண் சோலார் ஒன்றை சஞ்சு சாம்சனிடம் கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது.
ராஜஸ்தான் - பெங்களூரு:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று ஐ.பி.எல் 17வது சீசனின் 19 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. முன்னதாக, இன்றைய போட்டியில் இளஞ்சிவப்பு நிறத்திலான ஜெர்ஸியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியுள்ளது.
குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள கிராமப்புற பெண்களின் முன்னேற்றதுக்கு நிதியுதவி கொடுக்கும் நோக்கத்துடன் இந்த ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளதாக அந்த அணி நிர்வாகம் கூறியது. அதேபோல், இப்போட்டியில் விற்பனையாகும் ஒவ்வொரு 100 டிக்கெட்டில் கிடைக்கும் பணத்தில் குறிப்பிட்ட தொகை கிராமப்புற பெண்களின் ஆதரவுக்கு வழங்கப்பட உள்ளது.
கடந்த 5 வருடங்களாக இதை செய்து வரும் தங்களுடைய அணி, அதிகமான கிராமப்புற பெண்களுக்கு உதவி செய்துள்ளதாக ராஜஸ்தான் அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜாக் லெஸ் கூறியிருந்தார். மேலும், இப்போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் கிராமப்புறங்களில் இருக்கும் 6 ஏழை குடும்பங்களின் வீடுகளில் சூரிய சக்தியில் இயங்கும் மின்சார வசதியை செய்து கொடுக்க உள்ளதாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
மைதானத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்:
இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் டாஸ் போடும் பொழுது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது டாஸ் போடும் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கையில் ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் சோலார் இன்ஜினியர் தவ்ரி தேவி சோலார் விளக்கை கொடுத்தார். ராஜஸ்தான் அணியின் மனதை தொடும் இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டுகளையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஜெய்ஸ்வால், பட்லர், மேக்ஸ்வெல், விராட் கோலி, டூ பிளேஸிஸ் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அதிக சிக்ஸர்கள் அடித்து பல வீடுகளில் வெளிச்சத்தை உண்டாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் எவ்வளவு சிக்சர்கள் அடிக்கப் போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.