2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சதத்தினை விராட் கோலி ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளாசியுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி சதம் விளாசினார். ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் 8வது சதமாக பதிவாகியுள்ளது. இந்த சதத்தை விராட் கோலி 67 பந்துகளில் எட்டினார். அதேபோல் விராட் கோலி ஐபிஎல் தொடரில் மட்டும் 7500 ரன்களை கடந்துள்ளது. 


17வது ஐபிஎல் தொடர் மிகவும் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது. இதில் 19வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் சேர்த்தது. இதில் 72 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 12 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் விளாசி 113 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் அதிகபட்ச ரன்னாக இது பதிவாகியுள்ளது. 


நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் விளாசி 316 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் எடுத்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிறத் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் 7 ஆயிரத்து 579 ரன்கள் சேர்த்து, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசியவர் என ஏற்கனவே படைத்த சாதனையில் ரன்கள் கணக்கை உயர்த்தியுள்ளார். 


விராட் கோலி இதுவரை ஐபிஎல் தொடரில் மட்டும் 8 சதங்கள் விளாசியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெய்ல் 6 சதங்களுடனும் மூன்றாவது இடத்தில் பட்லர் 5 சதங்களுடன் உள்ளார். 


மோசமான சாதனை


ஐபிஎல் வரலாற்றில் மிகவும் மெதுவாக அடிக்கப்பட்ட சதமாகவும் இது பதிவாகியுள்ளது. விராட் கோலி இந்த சதத்தினை 67 பந்துகளில் எட்டியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2009ஆம் ஆண்டு மனீஷ் பாண்டே 67 பந்துகளில் சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் என்றால் அது, கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதத்தினை எட்டியதுதான் குறைந்த பந்துகளில் சதம் விளாசியுள்ளார். விராட் கோலியின் அதிகவேகம் சதம் என்பது கடந்த 2016ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக 47 பந்துகளில் சதம் விளாசியதுதான்.