நடப்பு ஐபிஎல் தொடரின் 65 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி அசாமில் உள்ள கவுகாத்தியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன் அடிப்படையில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்தது. 


அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி குறைந்த இலக்கை எளிதில் எட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கியது. ஆனால் பந்து வீச்சில் கலக்கிய ராஜஸ்தான் அணியின் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் பவர்ப்ளேவிற்குள் பஞ்சாப் அணியின் டாப் ஆர்டரைக் கழட்டினர். அதாவது தொடக்க வீரர் பிரப் சிம்ரன் டிரெண்ட் போல்ட் பந்திலும், ஷஷாங்க் சிங் மற்றும் ரோஸோவ் ஆவேஷ் கான் வீசிய 5வது ஓவரில் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேற, பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் சேர்த்திருந்தது. 


ஆட்டத்தின் 8வது ஓவரில் பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டினை இழக்க, அவ்வளவுதான் பஞ்சாப் அணியால் இந்த சரிவில் இருந்து மீண்டு வர முடியாது. அதனால் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி எளிதில் கிடைத்துவிடும் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் சரிவில் இருந்த பஞ்சாப் அணியை கேப்டன் சாம் கரனும் ஜிதேஷ் சர்மாவும் சிறப்பாக விளையாடி படிபடியாக வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். 


இவர்கள் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க ராஜஸ்தான் அணி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் எந்த பலனும் உடனடியாக கிடைக்கவில்லை. இவர்கள் கூட்டணி 45 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து அட்டகாசமாக விளையாடி அதன் பின்னர் பிரிந்தனர். ஆட்டத்தின் 16வது ஓவரினை வீசிய ஜிதேஷ் சர்மா விக்கெட்டினை கைப்பற்றினார். ஜிதேஷ் சர்மா தனது விக்கெட்டினை இழந்த போது பஞ்சாப் அணி 111 ரன்கள் சேர்த்திருந்தது. அதேபோல், பஞ்சாப் அணிக்கு 26 பந்துகளில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 


அதன் பின்னர் களத்திற்கு பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அஷுதோஷ் சர்மா வந்தார். இவர் களத்தில் இருந்த கேப்டன் சாம் கரனுடன் இணைந்து சூழலுக்கு ஏற்றவாரு விளையாடி அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். பஞ்சாப் அணிக்கு கடைசி மூன்று ஓவர்களில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. 


சரிவில் இருந்த அணியை படிப்படியாக மீட்டு வெற்றிக்கு அழைத்து வந்த சாம் கரன் 38 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டி பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 19 ஓவரில் சாம் கரனும் அஷுதோஷ் சர்மாவும் தலா ஒரு சிக்ஸரை விளாசி அசத்த, பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது. இறுதியில் பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து ராஜஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இறுதிவரை களத்தில் இருந்த சாம் கரன் 41 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசி 63 ரன்கள் சேர்த்து இறுதிவரை களத்தில் இருந்தார். மேலும் சாம் கரன் பந்து வீச்சிலும் 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.