ஐ.பி.எல் 2024:



இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 64 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. நேற்றைய போட்டியின் முடிவை தொடர்ந்து, ராஜஸ்தான் இரண்டாவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 


பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி:


இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள்விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் ஹோஹ்லர் காட்மோர் களம் இறங்கினார்கள்.


இந்த ஜோடி அதிரடியான ஆட்டத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஜெய்ஸ்வால் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது காட்மோருடன் ஜோடி சேர்ந்தார் சஞ்சு சாம்சன். 15 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற இவர் 4 பவுண்டரிகள் விளாசி 18 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.  அடுத்த இரண்டு பந்துகளிலேயே காட்மோர் விக்கெட்டை பறிகொடுக்க 42 ரன்களில் 3 விக்கெட்டை இழந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறியது.


145 ரன்கள் இலக்கு:


பின்னர் ரியான் பராக் மற்றும் அஸ்வின் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களது ஜோடி ஓரளவிற்கு ரன்களை சேர்த்து ராஜஸ்தான் அணியை மீட்டது. அப்போது அஸ்வின் பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர் அர்ஸ்தீப் சிங் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி மொத்தம் 19 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 28 ரன்கள் எடுத்தார்.


இவரது விக்கெட்டுக்கு பிறகு களம் இறங்கிய துருவ் ஜோரல் சாம் கரன் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ரோவ்மன் பவுல் 4 ரன்களிலும், டோனோவன் பேரிரியா 7 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுக்க திணறிக்கொண்டிருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ரியான் பராக் மட்டும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த வகையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை சாம் கரன், ஹர்சல் படேல் , ராகுல் சாஹர் தலா  2 விக்கெட்டுகளை எடுத்தனர்.