ஐ.பி.எல். தொடரில் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் – பிலிப் சால்ட்டுடன் களமிறங்கினார்.


சரவெடியாக வெடித்த சுனில் நரைன்:


தொடக்க வீரர் பில் சால்ட் 10 ரன்களில் அவுட்டானாலும், அடுத்து வந்த ரகுவன்ஷியுடன் ஜோடி சேர்ந்த சுனில் நரைன் தான் இறக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். பந்துகளையும் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசிக் கொண்டிருந்தார். இதனால், கொல்கத்தாவின் ஸ்கோரும் ஜெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருந்தது.


அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய சுனில் நரைன், தொடர்ந்து பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினார். அவரை அவுட்டாக்க சுழல் ஜாம்பவான்கள் சாஹல் – அஸ்வின் கூட்டணியை ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் பயன்படுத்தினார். ஆனால், அவர்களையும் சுனில் நரைன் விட்டு வைக்கவே இல்லை. அவர்களது பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார்.


முதல் சதம்:


இதனால், சுனில் நரைன் 49 பந்துகளில் 11 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதத்தை விளாசினார். சுனில் நரைன் ஐ.பி.எல். தொடரில் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். தொடர்ந்து பட்டாசாக வெடித்துக் கொண்டிருந்த சுனில் நரைன் ட்ரெண்ட் போல்ட் பந்தில் 18வது ஓவரில் வெளியேறினார். அவர் 59 பந்துகளில் 13 பவுண்டரி 6 சிக்ஸருடன் 109 ரன்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.


35 வயதான சுனில் நரைன் இதுவரை 168 போட்டிகளில் 102 இன்னிங்சில் பேட் செய்து 1,322 ரன்களை விளாசியுள்ளார். அதில் 1 சதம், 5 அரைசதங்களை விளாசியுள்ளார். 51 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடி 155 ரன்களை எடுத்துள்ளார்.


சுழற்பந்துவீச்சாளரான சுனில் நரைனை ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக கிரிக்கெட் உலகிற்கு அடையாளம் காட்டியது. தனது மாயாஜால சுழற்பந்துவீச்சால் ஐ.பி.எல். போட்டிகளில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல். தொடரில் முதல் சதத்தை விளாசிய சுனில் நரைனுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் சுனில் நரைன் அதிரடியால் 223 ரன்களை எடுத்தது. 


மேலும் படிக்க:  IPL 2024 Playoffs: இதுவரை 6 போட்டிகளில் தோல்வி.. பிளே ஆஃப்க்கு தகுதி பெற ஆர்சிபி என்ன செய்யவேண்டும்..?


மேலும் படிக்க: IPL 2024 Points Table: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய ஹைதராபாத்.. கடைசி இடத்தில் பெங்களூரு.. முழு பட்டியல் இதோ!