காபாவில் ஆஸ்திரேலியாவின் பெருமையை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப், இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசனில் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது. இந்தநிலையில், காபாவில் ஷமர் ஜோசப்பின் ஆட்டத்தை பார்த்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இவரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற பந்தயத்தில் இறங்கியுள்ளது. 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர்  டாம் கர்ரன் காயம் அடைந்துள்ளதால், 17வது சீசனில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், டாம் கர்ரனுக்கு பதிலாக ஷமர் ஜோசப்பை அணியில் எடுக்க ஆர்சிபி நிர்வாகம் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.






2024 மினி ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி பல முன்னணி பந்துவீச்சாளர்களை விடுவித்தது. அதன்படி, ஆர்சிபி அணியில் இருந்து ஹேசில்வுட், ஹசரங்கா மற்றும் ஹர்சல் படேல் போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர்களை விடுவித்தது. தொடர்ந்து 2024 மினி ஏலத்தில் அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கர்ரன் மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் ஆர்சிபி அணியால் வாங்கப்பட்டனர். ஆனால், சமீபத்தில் முடிவடைந்த பிபிஎல் சீசனில் டாம் கர்ரன் முழங்காலில் காயம் ஏற்பட்டு, அது தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் 17வது சீசனில் இவர் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.


டாம் கர்ரனுக்கு பதிலாக ஷமர் ஜோசப்பா..? 


டாம் கர்ரன் விளையாடுவதில் சந்தேகம் இருப்பதால், அவருக்கு பதிகால ஷமர் ஜோசப் ஒரு நல்ல தேர்வாக இருப்பார் என்று கூறப்படுகிறது. ஆர்சிபி அணி எப்போதும் பேட்டிங் வரிசையில் தரமாக இருக்கும். ஆனால், பந்துவீச்சை பொறுத்தவரை எப்போதும் சொதப்பல் அணியாகவெ பார்க்கப்படுகிறது. எவ்வளவு ரன்களை இந்த அணி அடிக்கிறதோ, அதே அளவுக்காக ரன்களை பீல்டிங்கில் விட்டுகொடுத்துவிடும். இதன் காரணமாகவே, ஆர்சிபி அணி இதுவரை நடந்த ஐபிஎல் 16 சீசனில் கோப்பையை வெல்லாததற்கு காரணம். 


இந்தநிலையில், ஷமர் ஜோசப் போன்ற 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச கூடிய நபர் ஆர்சிபி அணிக்கு கிடைத்தால் அந்த அணிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும். 






சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஷமர் ஜோசப் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும், ஷமர் ஜோசப் பேட்டிங் மூலம் 57 ரன்களையும் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றியை பெற்றுகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.