Mumbai Indians IPL: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் மற்றும் ஹர்திக் என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.


மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பிரச்னை:


நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் நிலவும் பிரச்னை தான், ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.  11 ஆண்டுகள் அந்த அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, குஜராத் அணியில் இருந்து மீண்டும் மும்பை அணிக்கு வந்த ஹர்திக் பாண்ட்யாவை அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்தது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளையும், அதிருப்தியையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், நடப்பு தொடரில் மும்பை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதையும் நம்மால் காண முடிந்தது.


இதையும் படிங்க: Watch Video: ஆறுதல் கூற வந்த மலிங்கா.. மதிக்காமல் தள்ளிவிட்டாரா ஹர்திக் பாண்டியா? வைரலாகும் வீடியோ!


இரண்டாக உடைந்த மும்பை:


இந்நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியே இரண்டாக பிரிந்து கிடப்பதாக தற்போது தகவல்கள் வெளியாக தொடங்கியுள்ளன. அதன்படி, ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோக பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்கா போன்றோரும் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம், புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிற்கு இஷான் போன்ற சில வீரர்கள் ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது. மேலும், மும்பை அணியின் உரிமையாளர்களும் பாண்ட்யாவிற்கே ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






களத்தில் வெளிப்படும் பிரச்னை:


களத்தில் நிகழும் சில சம்பவங்களும் ரோகித் மற்றும் ஹர்திக் இடையேயான உறவு நேர்மறையாக இல்லை என்பதையே உணர்த்துகின்றன. எப்போதும் 30-யார்ட் சர்கிளுக்குள் ஃபீல்டிங் நிற்கும் ரோகித் சர்மாவை, பவுண்டரி லைனுக்கு செல்லும்படி பாண்ட்யா வலியுறுத்திய வீடியோ இணையத்தில் வைரலானது. குஜராத் உடனான போட்டியில் பந்துவீச்சின் போது பாண்ட்யாவின் அறிவுரையை, பும்ரா நகைச்சுவையாக ரோகித் சர்மாவுடன் பகிர்வது போன்ற சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனிடையே, ஐதராபாத் அணியுடனான போட்டியின்போது, பந்துவீச்சு பயிற்சியாளர் மலிங்காவை அவமானப்படுத்தும் வகையில் பாண்ட்யா நடந்துகொண்டதாகவும் தற்போது சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. முன்னதாக, மும்பை அணியின் கேப்டனாக பாண்ட்யா நியமிக்கப்பட்டபோது, பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் மனமுடைவதை போன்ற சோகமான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.


ரசிகர்களின் குற்றச்சாட்டு என்ன?


11 ஆண்டுகளாக கேப்டன் பதவி வகித்ததோடு, 5 முறை கோப்பையையும் வென்று கொடுத்த, ரோகித் சர்மாவிற்கு மும்பை அணி நிர்வாகம் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்பதே பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. சக வீரர்களை அணுகும் முறை, மூத்த வீரர்களை மதிக்காது குறித்து பாண்ட்யாவை ரசிகர்கள் சாடுகின்றனர். அதோடு, தன்னை கூல் கேப்டன் என காட்டிக்கொள்ளும் விதமான செயல்பாடுகளில் அவர் ஈடுபடுவதாகவும், ஆனால் உண்மையில் அந்தளவிற்கு திறமையான கேப்டனாக பாண்ட்யா மேம்படவில்லை என்றும் ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். மேலும், தனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்த மும்பை அணியில் இருந்து, கேப்டன் பதவிக்காக குஜராத் அணிக்கு சென்றவர் ஹர்திக் பாண்ட்யா. ஆனால், வெறும் கூடுதல் பணம் மற்றும் பதவிக்காக, குஜராத் அணியில் இருந்து மீண்டும் மும்பை அணிக்காக தாவியுள்ளார். இதனால், பாண்ட்யா கிரிக்கெட் விளையாட்டிற்கு உண்மையாக இருக்காமல், வெறும் பணம், பதவி மற்றும் புகழுக்காக விலைபோகிறார் என ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.