நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். முன்னதாக, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து, தற்போது புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. 


யார் முதலிடம்..?


டெல்லி அணிக்கு எதிரான வெற்றியின்மூலம் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடர்ந்து இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் +0.800 என்ற நிகர ரன் ரேட்டுடன் 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. சென்னையும் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றாலும், நிகர ரன் ரேட் ராஜஸ்தானை விட அதிகம். CSK இன் நிகர ரன் ரேட்+1.979 ஆகும். சிஎஸ்கே 4 புள்ளிகளையும் பெற்றுள்ளது. 


இந்த புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்காவது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆறாவது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் ஏழாவது இடத்தில் உள்ளது.


ஆரஞ்சு கேப்:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசன் 143 ரன்களுடன் ஆரஞ்சு கேப் பந்தயத்தில் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம், ரியான் பராக் 127 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 98 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் 2 போட்டிகளில் 97 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 95 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த வகையில் டாப்-5 பேட்ஸ்மேன்களில் 4 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். 


பர்பிள் கேப்:


அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸின் முஸ்தாபிசுர் ரஹ்மான் முதல் இடத்தில் இருக்கிறார். 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முஸ்தாபிசுர் ரஹ்மான் 2 போட்டிகளில் 9.83 என்ற சராசரியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இதைத் தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸின் ஹர்பிரீத் ப்ரார், மும்பை இந்தியன்ஸின் ஜஸ்பிரித் பும்ரா, ராஜஸ்தான் ராயல்ஸின் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் பஞ்சாப் கிங்ஸின் ககிசோ ரபாடா ஆகியோர் முறையே இரண்டு, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர். இருப்பினும், முஸ்தாபிசுர் ரஹ்மானைத் தவிர, இந்த பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இருப்பினும், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முஸ்தாபிசுர் ரஹ்மான் பர்பிள் தொப்பிக்கான போட்டியில் முன்னணியிலும் உள்ளனர்.


போட்டி சுருக்கம்:


ஐபிஎல் 2024 இன் 9வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 185 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த டெல்லி அணியால் 173 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ராஜஸ்தான் அணியில் ரியான் பராக் ஆட்டமிழக்காமல் 45 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் உதவியுடன் 84 ரன்கள் எடுத்தார்.