17வது ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் இரண்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் மொத்தம் 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி அதில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகளில் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணியின் ரன்ரேட்டும் மிகவும் மோசமாகவே உள்ளது. இதனால் பெங்களூரு அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிகளைப் பதிவு செய்தால், நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினைப் பெறும். இதுமட்டும் இல்லாமல் பெங்களூரு அணிக்கு மீதமுள்ள எட்டு போட்டிகளும் வாழ்வா சாவா ஆட்டங்களாகத்தான் இருக்கப்போகின்றது. 


பெங்களூரு அணி இன்றைய போட்டியில் தனது சொந்த மைதனாத்தில் களமிறங்கினாலும் பேட்டிங்கிற்கு ஏதுவான மைதானத்தில் வழக்கமாக பெங்களூரு அணி வீரர்கள் சொதப்புவார்கள் என ரசிகர்கள் கருதுகின்றனர். 


ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இதுவரை 23 போட்டிகளில் நேருக்குநேர் மோதி பலப்பரீட்சை நடத்தியுள்ளது. இந்த மோதலில் ஹைதராபாத் அணி அதிகபட்சமாக  12 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 போட்டிகளில் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. ஒரு போட்டி முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. 


ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் நடப்பு தொடரில் மிகவும் அபாயகரமான அணியாகவே செயல்பட்டு வருகின்றது. கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகின்றது. பெங்களூரு அணி வசம் கடந்த 11 ஆண்டுகளாக இருந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை, 277 ரன்கள் குவித்து தன்வசப்படுத்தியுள்ளது ஹைதராபாத். இப்படியான பேட்டிங் லைன் அப் கொண்ட அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் பந்து வீச்சு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.