நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையிலான போட்டி, நேற்று அதாவது ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முடிந்தது. இந்த போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல். தொடரின் எல்கிளாசிக்கோ எனப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி மும்பை அணியை அதன் சொந்த மைதானமான வான்கடேவில் வீழ்த்தி அசத்தியுள்ளது.
கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு
2013ஆம் ஆண்டில் இருந்து மும்பை அணியின் கேப்டனாக கடந்தாண்டு வரை செயல்பட்டு 5 முறை கோப்பையை வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா. ஐபிஎல் தொடரில் ஒரு அணி 5 முறை கோப்பையை கைப்பற்றிய முதல் அணி என்ற பெருமையையும், 5முறை கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையையும் மும்பை இந்தியன்ஸ் அணியும் அதன் கேப்டனான ரோகித் சர்மாவும் பெற்றனர். ஆனால் மும்பை அணி நிர்வாகம் இந்த ஆண்டு திடீரென ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பொறுப்பை வழங்கியது.
இதற்கு ரோகித் சர்மாவின் ரசிகர்கள் இன்று வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மும்பை அணி களமிறங்கும் போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவை எதிர்த்தும், கொச்சைப்படுத்தும் விதமாகவும் செயல்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் மும்பையின் ராஜா ரோகித் சர்மா என ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக முழங்கி வருகின்றனர். மும்பை அணியின் ரசிகர்கள் நடவடிக்கை தவறு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் ஹர்திக் பாண்டியாவின் நடவடிக்கைகள், மும்பை ரசிகர்களின் கோபத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.
ரோகித் சதம் குறித்து ஒரு வார்த்தை..
மும்பை ரசிகர்களின் கோபத்தை அதிகரிக்கும் படியாக ஹர்திக் பாண்டியா சென்னை போட்டிக்கு முன்னதாக பல விஷயங்களைச் செய்திருந்தாலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைச் சந்தித்த பின்னர், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பொறுப்பற்ற பேச்சு, மும்பை ரசிகர்களை குறிப்பாக ரோகித் சர்மாவின் ரசிகர்களின் கோபத்தினை மேலும் அதிகரித்துள்ளது. அப்படி என்ன பேசினார் என நீங்கள் கேட்கலாம். ஹர்திக் பாண்டியா பேசியதை சுருக்கமாக இங்கு குறிப்பிட்டுள்ளோம்,
“சென்னை அணி நிர்ணயித்த இலக்கு இந்த மைதானத்தில் எட்டக்கூடியதுதான். சென்னை அணி சிறப்பாக பந்து வீசியது. வெற்றிக்காக அவர்களின் கேம் ப்ளானை சிறப்பாக செயல்படுத்தினர். குறிப்பாக ஸ்டெம்புகளுக்குப் பின்னால் ஒருவர் (தோனி) இருக்கின்றார். அவருக்கு இங்கு என்ன எடுபடும் என்பது நன்றாகத் தெரியும். பதிரானா ஒரே ஓவரில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாங்கள் வேறு எதாவது கேம் ப்ளானை பின்பற்றி இருக்கவேண்டும்” என கூறினார்.
ஹர்திக் பாண்டியாவின் இந்த பேச்சில், மும்பை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி ஆட்டத்தின் முதல் பந்தையும் கடைசி பந்தையும் எதிர்கொண்டு களத்தில் தனது விக்கெட்டினை இழக்காமல், 63 பந்தில் 105 ரன்கள் குவித்த ரோகித் சர்மா குறித்து ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. அதேநேரத்தில் நான்கு ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த பும்ரா குறித்து ஒருவார்த்தை பேசவில்லை. அதேபோல், மூன்று ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்த நபி குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை.
பல நேரங்களில் கேப்டன்கள் தோல்விக்கான பொறுப்பை முழுக்க முழுக்க தாங்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் மும்பை அணியின் தோல்விக்கு தன்னை காரணகர்த்தாவிக்கியிருக்க காரணமும் இருந்தது. ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் வீசிய 4 பந்துகளை எதிர்கொண்ட தோனி ஹாட்ரிக் சிஸ்சருடன் 20 ரன்கள் சேர்த்தார். சென்னை அணி இந்த போட்டியில் வெல்லவும் இது ஒரு காரணமாக இருந்தது. ஆனால் ஹர்திக் இதுகுறித்து ஒருவார்த்தை பேசவில்லை.
தோனி வீழ்த்த முடியாத கேப்டன் இல்லை..
ஆனால் ஒரு அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா, தொடக்க வீரரான ரோகித் சர்மாவின் சதம் குறித்து கட்டாயம் பேசியிருக்க வேண்டும். தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை களத்தில் இருந்த ரோகித் சர்மாவின் போராட்ட குணம் குறித்து ஹர்திக் பாண்டியா பேசியிருக்க வேண்டும். மாறாக தோனி குறித்தும் தோனியின் கேம் ப்ளான் குறித்தும் பேசியுள்ளார்.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் தோனி குறித்து பேசுவதை புரிந்துகொள்ள முடிகின்றது. அதேநேரத்தில் ருதுராஜ் தோனி குறித்து பேசியது ரசிக்கும்படியாகவே உள்ளது. ஹர்திக் ரோகித், பும்ரா மற்றும் தனது அணியின் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து பேசியிருப்பதை பாராட்டுக்குரியதாகவோ, ரசிக்கும்படியாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு அணியாக நீங்கள் ஒரு அணியிடம் தோற்றிருக்கும்போது, எதிரணியின் பலம் குறித்து பேசுவதை ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப்பாக பார்க்கலாம். ஆனால் சொந்த அணியின் முயற்சி குறித்து சொந்த அணியின் ஆட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் விமர்சிக்காமல் என்ன செய்வார்கள்? சென்னை அணியை மும்பை அணி இறுதிப் போட்டியில் மட்டும் மூன்று முறை வீழ்த்தி அமர்க்களப்படுத்தியுள்ளது.
அந்த மூன்று முறையும் சென்னை அணியின் கேப்டன் தோனிதான். தோனியின் வியூகங்கள் எடுபடாமல் போனது மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் என்பதை கடந்த கால வரலாறு கூறும். தோனி வீழ்த்தவே முடியாத கேப்டன் இல்லை என்பதை பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார் ரோகித் சர்மா. மும்பை அணிக்கு எதிராக சென்னை அணியும் பல மறக்கமுடியாத வெற்றிகளைப் பெற்றுள்ளது.
ஆனால் தோனியோ ரோகித் சர்மாவோ எதிரணியின் பலத்தை பேசிய நேரத்தில் தங்களது அணியின் முயற்சிகள் குறித்தும் பாராட்டியுள்ளனர். இப்படி இருக்கும்போது, ஹர்திக் பாண்டியா தோனியின் புகழ் பேசி, தோனி ரசிகர்களின் ஆதரவை பெற முயற்சிக்கின்றாரா என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. வரும் போட்டிகளிலாவது ஹர்திக் பாண்டியா தனது அணியையும் பாராட்டும் பொறுப்பான கேப்டனாக செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.