நான் கொஞ்சம் நடுக்கமாக நின்று கொண்டிருந்தேன்; தோனி பாய் வந்து என்னை சாந்தப்படுத்தினார். எனக்கு அது ஆட்டத்தில் ஆறுதலாக இருந்தது.. அது பதிரனாவின் வார்த்தை மட்டுமல்ல. நேற்றைய போட்டிக்கான வெற்றிக்கு அடித்தளம் கூட. சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சுதான் சி.எஸ்.கேவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.


மைதானத்தை அதிர வைத்த தோனி:


எங்கு சென்றாலும் நாங்கள் ராஜா தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.  மும்பை-சென்னை அணிகள் மோதும் போட்டிகள் பலம் வாய்ந்த அணிகள் மோதும் எல் கிளாசிகோ போட்டியாக ரசிகர்களிடையே பார்க்கப்படுகிறது. அதேபோலதான், நேற்றையை ஆட்டமும் காரசாரம் குறைவில்லாமல் ரசிகர்களுக்கு விருந்தாக, குறிப்பாக சென்னை ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. 


அனல் பறந்த போட்டியில் முதலில் பேட்டிங்க செய்த சென்னை அணி மும்பையின் வெற்றிக்கு 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் 69 ரன்களும், சிவம் துபே 66 ரன்களும் விளாசினர். தொடக்கத்தில் சற்று மெதுவாக ஆட்டம் நகர்ந்தாலும், அடுத்த 10 ஓவர்களுக்கு விறுவிறுப்பானது. அதுவும், கடைசி ஓவரில் தல தோனியின் ஹாட்ரிக் சிக்ஸ்சர்கள் வான்கடே மைதானத்தை அதிர வைத்தது. ஒருவேளை போட்டியே தோற்று போய் இருந்தாலும், தோனியின் அந்த 3 சிக்ஸர்கள் சென்னை ரசிர்களுக்கு ஆத்ம திருப்தியை கொடுத்திருக்கும். 




42 வயது மனிதன் தந்த பயம்:


பதிரனா மட்டுமல்ல, கேப்டன் ருதுராஜ் பேசும் போதும், எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் அடித்த அந்த 3 சிக்ஸர்கள் தான் வெற்றிக்கு வழிவகுத்தது. போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தை கொண்டு வந்தது என கூறியது மைதானத்தில் சத்தத்தை அதிகப்படுத்தியது. 42 வயதான ஒருவரால் எதிரணிக்கு இந்த அளவுக்கு நடுக்கத்தை கொடுக்க முடியுமேயானால், அது சாதாரண விஷயமல்ல என தலயின் ரசிகர்கள் தோனியிசம் குறித்து புகழ்ந்து வருகின்றனர். 


தனது சொந்த அணியில் தனக்கு இருக்கும் மதிப்பை காட்டிலும், மும்பை அணி வீரர் ஹர்திக் பாண்டியா தோனி பற்றி பேசியது தான் தற்போதைய வைரல் கண்டெண்டாக மாறியுள்ளது. ஸ்டம்புகளுக்கு பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார். பந்து வீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் முடிவு செய்கிறார் என்று ஹர்திக் கொடுத்த ஸ்டேட்மன்ட், தோனி சி.எஸ்.கே. மட்டுமின்றி ஐ.பி.எல். தொடருக்கே முடிசூடா மன்னனாக திகழ்கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.