17வது ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி தனது நான்காவது வெற்றியைப் பெற்றுள்ளது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு செய்தது. சின்னச்சாமி மைதானத்தில் இலக்கைத் துரத்தி வெற்றி பெற்று விடமுடியும் என நினைத்து மகிழ்ச்சியில் இருந்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கு பெரும் விரக்தியை ஏற்படுத்தக்கூடிய சோகம் காத்திருந்தது. 


முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த அணி என தன்வசம் இருந்த சாதனையை ஹைதராபாத் அணியே முறியடித்துள்ளது. ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் 41 பந்தில் 102 ரன்கள் விளாசினார். க்ளாசன் 31 பந்தில் 67 ரன்கள் குவித்திருந்தார். டெத் ஓவர்களில் களமிறங்கிய சமத் 10 பந்துகளில் 37 ரன்கள் குவித்திருந்தார். 


அதன் பின்னர் 288 ரன்கள் இலக்கை நோக்கி விராட் கோலியும் கேப்டன் ஃபாப் டூ ப்ளெசிஸும் தொடங்கினர். இவர்கள் கூட்டணி அதிரடியாக ரன்கள் குவித்தது. இருவரும் மாறி மாறி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினர். இவர்கள் ஆட்டத்தினைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் குஷியில் குதித்தனர். ஆனால் பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் விராட் கோலி தனது விக்கெட்டினை மயங்க் மார்கண்டே பந்தில் க்ளீன் போல்ட் முறையில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த வில் ஜேக்ஸ் தனது விக்கெட்டினை எதிர்பாராத விதமாக இழக்க பெங்களூரு அணியின் சரிவு தொடங்கியது. 


அதன் பின்னர் வந்த ரஜித் படிதார் தனது விக்கெட்டினை மார்கண்டே ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.  பேட் கம்மின்ஸ் வீசிய 10வது ஓவரில் டூ ப்ளெசிஸ் மூன்றாவது பந்தில் வெளியேற, கடைசி பந்தில் சௌரவ் சௌகான் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சின்னச்சாமி மைதானத்தில் இருந்து பெங்களூரு அணியின் ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உரைந்தனர். 


ஆனால் ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தினேஷ் கார்த்திக் பொறுப்பாகவும் சிறப்பாகவும் விளையாடி வந்தார். இவரது அதிரடி ஆட்டத்தினை ஹைதராபாத் அணியால் தடுக்கவே முடியவில்லை. இவருக்கு உறுதியாக மகிபால் லோம்ரோர் சிறிது நேரம் இருக்க, அதன் பின்னர் அனுஜ் ராவத் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கினார். கடைசி 5 ஓவர்களில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 101 ரன்கள் தேவைப்பட்டது. 


தினேஷ் கார்த்திக் 23 பந்தில் தனது அரைசதத்தினை அதிரடியாக விளாசினார். கடைசி மூன்று ஓவர்களில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 72 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தினேஷ் கார்த்திக் தனது போராட்டத்தினை இழக்காமல் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆட்டத்தின் 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்டினை நடராஜன் பந்தில் இழந்து வெளியேறினார். அதிரடியாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் 35 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளும் 7 சிக்ஸரும் விளாசி 83 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். 


இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து  262 ரன்கள் சேர்த்தது. இதனால் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 549 ரன்கள் சேர்த்தது. இரு அணிகளும் இணைந்து 77 பவுண்டரிகளை விளாசியுள்ளது. அதேபோல் இரு அணிகளும் இணைந்து 38 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளது.