நடப்பு ஐபிஎல் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டி சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. சொந்த மண்ணில் டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு செய்தது. 


ஹைதராபாத் அணியின் இன்னிங்ஸை டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா தொடங்கினர். இவர்கள் கூட்டணி முதல் ஓவரில் மட்டும் நிதானமாக ஆடியது. அதன் பின்னர் ஒவ்வொரு ஓவரையும் துவம்சம் செய்தது. குறிப்பாக டிராவிஸ் ஹெட் ஆட்டத்தினை பெங்களூரு அணியின் பவுலர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இவரது அதிரடியான ஆட்டத்தினை மறுமுனையில் நின்றுகொண்டு இளம் வீரரான அபிஷேக் சர்மா ரசித்துக்கொண்டு இருந்தார். ஹெட் பவுண்டரிகள் விளாசுவதை விட சிக்ஸர்கள் விளாசுவதில்தான் கவனம் செலுத்தினார். 20 பந்தில் அரைசதத்தினை பவர்ப்ளேவிற்குள் எட்டிய  ஹெட் தனது அதிரடி ஆட்டத்தினை நிறுத்தவே இல்லை. 


ஹைதராபாத் அணி 8வது ஓவரில் முதல் பாதியிலேயே 100 ரன்களை எட்டியது. முதல் விக்கெட்டுக்கு ஹைதராபாத் அணி 108 ரன்கள் சேர்த்தது. அபிஷேக் சர்மா தனது விக்கெட்டினை 22 பந்தில் 34 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அவருக்குப் பின்னர் களத்தில் அதிரடி ஆட்டக்காரர் ஹென்றிச் க்ளாசன் களமிறங்கினார். முதல் 10 ஓவர்களில் ஹைதராபாத் அணி 128 ரன்கள் சேர்த்தது. 


அதிரடியாக ஆடிவந்த ஹெட் மற்றும் க்ளாசன் கூட்டணி 23 பந்தில் 50 ரன்கள் சேர்த்தது. டிராவிஸ் ஹெட் தனது ருத்ரதாண்டவ ஆட்டத்தினால் 39 பந்துகளில் சதம் விளாசினார். இவர் 9 பவுண்டரியும் 8 சிக்ஸரும் விளாசி அசத்தியதுடன் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக விளாசப்பட்ட 4வது சதத்தினை பதிவு செய்தார். மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான அதிவேக சதத்தினையும் எட்டியவர் என்ற பெருமையையும் பெற்றார். சதம் விளாசி அடுத்த இரண்டு பந்துகளில் தனது விக்கெட்டினை இழந்தார் டிராவிஸ் ஹெட். 


ஆனால் களத்தில் இருந்த ஹென்றிச் க்ளாசன் தனது அதிரடி ஆட்டத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். 23 பந்துகளில் அரைசதம் விளாசிய க்ளாசன் தொடர்ந்து வானவேடிக்கை காட்டிவந்தார். ஹைதாராபாத் அணி 15 ஓவர்களில் 205 ரன்கள் குவித்திருந்தது. 


17வது ஓவரின் கடைசிப் பந்தில் அதிரடியாக விளையாடி வந்த ஹென்றிச் க்ளாசன் தனது விக்கெட்டினை 31 பந்தில் 67 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவருக்கு அடுத்து யாஷ் தயாள் வீசிய ஓவரில் மார்க்ரம் கேட்ச் ஆகி வெளியேறிக்கொண்டு இருக்கும்போது மூன்றாவது நடுவர் நோ-பால் என கூற மைதானமே அதிர்ந்தது. இறுதி கட்டத்தில் அப்துல் சமாத் வெறித்தனமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். 


இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. ஏற்கனவே நடப்பு தொடரில் மும்பை அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் சேர்த்திருந்தது.