நடப்பு ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் குஜராத் அணியும் மோதிக்கொண்டது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் வாழ்வா சாவா நெருக்கடியில் களமிறங்கியது.
டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்த பெங்களூரு அணியின் கேப்டன் டூ ப்ளெசிஸ் பந்து வீச முடிவு செய்தார்.முதலில் பேட் செய்த குஜராத் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் சேர்த்தது.
அடுத்து களமிறிங்க பெங்களூர் அணி ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்து அதிரடியாக விளையாடி இலக்கைத் துரத்த ஆரம்பித்தது. குறிப்பாக பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் 18 பந்துகளில் அரைசதம் விளாசி அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தார். விராட் கோலியின் தனக்கு கிடைத்த பந்துகளை எல்லாம் மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டி வந்தார். இருவரும் இணைந்து 3.1 ஓவரில் பெங்களூர் அணியை 50 ரன்கள் எட்டவைத்தனர். இவர்களின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்தபோது பெங்களூரு அணி 10 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி எளிதில் வெற்றி பெற்று விடும் என தோன்றியது.
பவர் பிளேவின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசஸ் தனது விக்கெட்டினை இழந்தார்.
பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 92 ரன்கள் சேர்த்திருந்தது. பெங்களூர் அணியின் பேட்டிங் வரிசையை பார்த்தபோது பெங்களூர் அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என அனைவருக்கும் தோன்றியது. ஆனால் மிகச் சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணி பெங்களூர் அணியின் பலமான பேட்டிங் வரிசையை சீட்டுக்கட்டு போல் சரிய வைத்தது. குறிப்பாக குஜராத் அணியின் ஜோஸ்வா லிட்டில் பவர் பிளேவுக்கு பிறகு தான் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டுகளை அள்ளினார்.
வில் ஜாக்ஸ் ஒரு ரன்னிலும் ரஜித் படித்தார் இரண்டு ரன்னிலும் கிளன் மேக்ஸ்வெல் நான்கு ரன்னிலும் கேமரூன் கிரீன் ஒரு ரன்னிலும் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வெளியேறினர். களத்தில் விராட் கோலி இருந்ததால் பெங்களூர் அணிக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் விராட் கோலியும் 27 பந்தில் 42 ரன்கள் சேர்த்து நிலையில் ஆட்டத்தின் 11 வது ஓவரில் தனது விக்கெட் இழந்து வெளியேறினார். இதனால் ஆட்டம் முழுக்க முழுக்க குஜராத் கைவசம் வந்தது போல் இருந்தது.
ஆனால் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக், குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் வீசிய 12 வது ஓவரி 3 பவுண்டர்களை பறக்கவிட்டு பெங்களூர் அணி மீது இருந்த அழுத்தத்தை குறைத்தார். இறுதியாக பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியது மட்டும் இல்லாமல் ப்ளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கின்றது.