மைதானத்தில் பவுண்டரி எல்லைகளின் நீளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். 


ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்..சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அதன்படி இதுவரை 51 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்று(மே4) பெங்களூருவில் நடைபெற்று வரும் 52 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டி20 கிரிக்கெட் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர், பவுண்டரி லைனில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.


முன்னதாக நடப்பு ஐபிஎல் சீசனில் 200 ரன்களை எடுப்பது எளிதாகிவிட்டது. பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்டர்களுக்கு இடையேயான ஆட்டங்கள் இந்த சீசனில் பேட்டர்களுக்கு இடையேயான போட்டியாக மாறி வருகிறது. 200 ரன்களை ஒரு அணி எடுத்து இருந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கும் அணியும் சற்றும் குறையாமல் ஸ்கோரை எட்டிவிடுகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற 42 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களை குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அதன்படி ஜானி பேர்ஸ்டோவ்  மற்றும் சசாங் சிங்கின் ருத்ர தாண்டவ பேட்டிங் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியை 262 ரன்களுடன் எட்டு பந்துகள் மிச்சம் வைத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.


அஸ்வின் வைத்த கோரிக்கை:


இது ஒருவகையில் கொண்டாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டாலும் மறுபுறம் இது பந்து வீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. இந்நிலையில் தான் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்இது தொடர்பாக அஸ்வின் பேசுகையில், “அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்ட மைதானங்கள் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாது. மேலும் அன்றைய சர்வதேச போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பேட்கள் தெரு கிரிக்கெட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட் பேட்கள் தரமாக இருக்கின்றன. மேலும் விளம்பரதாரர்களின் எல்இடி போர்டுகள் வந்து விட்டதால் பவுண்டரி எல்லைகள் சில தூரம் உள்ளே வந்துவிட்டது. இது கிரிக்கெட்டை ஒருபுறமாக சாய்க்கிறது" என்று கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், " மைதானத்தில் பவுண்டரி எல்லைகளின் நீளம் அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது ஐபிஎல் தொடரில் நீங்கள் பந்துவீச்சில் விட்டுக் கொடுக்கப்பட்ட ரனகளின் புள்ளி விவரங்களை பார்த்தால், எங்களுடைய அணி ராஜஸ்தான் ராயல்ஸ் மிகவும் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறதுநாங்கள் ஜெய்ப்பூர் மைதானத்தில் எடுத்த 180 ரன்கள்தான் மிக அதிகமானது. ஆனால் நாள் முடிவில் ரசிகர்கள் பவுண்டரி சிக்ஸர்களை பார்க்கத்தான் மைதானத்திற்கு வருகிறார்கள்” என்று பேசியுள்ளார் அஸ்வின்.