ஐபிஎல் 2024ல் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனின் 62வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தப் போட்டியில் களம் இறங்கியவுடன் சிறப்பான சாதனை ஒன்றை படைக்கவுள்ளார். இன்று கோலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 250வது போட்டியில் விளையாடவுள்ளார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஐபிஎல் அணிக்காக 250 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைக்கவுள்ளார். 






விராட் கோலி தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை சிறப்பாகவே விளையாடியுள்ளார். இதுவரை விராட் கோலி 249 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் மற்றும் 55 அரை சதங்கள் உள்பட 7897 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சிறந்த ஸ்கோர் 113 ரன்கள். விராட் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் தனது முதல் போட்டியில் விளையாடினார். அன்று முதல் தற்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். 


ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்காக 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் விளையாடிய சாதனை மகேந்திர சிங் தோனியின் பெயரில் உள்ளது. 


முதல் இடத்தில் யார் தெரியுமா..? 


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி 262 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், எம்.எஸ். தோனி 5218 ரன்கள் எடுத்துள்ளார். இவரை தொடர்ந்து, ரோஹித் சர்மா ஐபிஎல்லில் அதிக போட்டிகளில் விளையாடிவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா இதுவரை 256 ஐபிஎல் போட்டிகளில் டெக்கான் சார்ஜஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இந்த பட்டியலில் தினேஷ் கார்த்திக் 254 போட்டிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


இதுவரை நடந்த 16 சீசன்களிலும் விராட் கோலி சிறப்பாக விளையாடி இருந்தாலும், இந்த சீசனும் இவருக்கு சிறப்பானதாகவே இருந்துள்ளது. இந்த சீசனில் விராட் கோலி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 5 அரை சதங்கள் 634 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல்2024ல் விராட் கோலியின் சிறந்த ஸ்கோர் 113 ரன்கள் ஆகும். மேலும், இந்த சீசனில் விராட் கோலி 55 பவுண்டரிகள் மற்றும் 30 சிக்சர்களை அடித்துள்ளார்.






ஐபிஎல் 2024ன் புள்ளிகள் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 போட்டிகளில் வெற்றியும், 7ல் தோல்வியும் கண்டு 10 புள்ளிகளை பெற்றுள்ளது.