ஐபிஎல் 2024: பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) டெல்லி கேபிடல்ஸ் (டிசி) அணியுடன் மோதுகிறது.


இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் இன்றைய 62வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. 


தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2024 புள்ளிகள் தரவரிசையில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 5ல் வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றி, 12 புள்ளிகளுடன் அட்டவணையில் 5வது இடத்தில் இருக்கிறது. 


இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 


இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மொத்தம் 29 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி தடை காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. 


இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4-1 என்ற கணக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 


போட்டி நாளில் மழை பெய்ய 65% மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 39% என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது இன்றைய போட்டியை பெரிதும் பாதிக்கலாம். ஸ்டேடியத்தை பொறுத்தவரை, இந்த சீசனில் விளையாடிய ஐந்து போட்டிகளில், முதலில் பேட் செய்யும் அணிகளுக்கும் சேஸிங் செய்யும் அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டிகள் நடந்துள்ளன. இதில், மூன்று போட்டிகளில் சேசிங் அணியும், இரண்டு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளது. 


பெங்களூரு ஸ்டேடியத்தில் இதுவரை எப்படி..? 


பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே 11 போட்டிகள் நடந்துள்ளது. இதிலும், அதிகபட்சமாக பெங்களூரு 5 போட்டிகளிலும், டெல்லி 4 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை. 


பிட்ச் ரிப்போர்ட்: 


பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியமானது பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்றே சொல்லலாம். சிறிய ஸ்டேடியம் என்பதால் பவுண்டரிகள் நாலாபுறமும் பந்துகள் பறக்கும். எனவே, இரு அணியின் பந்துவீச்சாளர்களும் கவனமாக பந்துவீசுவது நல்லது. 


இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையே யான போட்டி அதிக ஸ்கோரிங் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம். 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:


விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், கர்ண் சர்மா, யாஷ் தயாள், முகமது சிராஜ்


டெல்லி கேப்பிடல்ஸ்:


ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், பிருத்வி ஷா, ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, லிசாட் வில்லியம்ஸ்