ஐபிஎல் 2024ன் நேற்றைய 68வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நான்காவது அணி என்ற பெருமையுடன் எலிமினேட்டர் சுற்றில் விளையாட இருக்கிறது. அதே நேரத்தில் எப்படியாவது பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும் என்று எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் பயணம் இந்த சீசனில் முடிவுக்கு வந்தது.






இந்த வெற்றிக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் தங்கள் கம் பேக் மற்றும் பிளே ஆஃப்க்கு சென்றது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "என்ன ஒரு இரவு... நம்பமுடியாதது. இங்குள்ள சூழ்நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, இந்த சீசனின் கடைசி லீக் போட்டியில் இப்படி வெற்றி பெற்றது ஒரு பெரிய உணர்வு. குறிப்பாக இதுபோன்ற ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்யும்போது ரன்கள் குவிப்பது எளிதானது அல்ல.


'இந்த சீசனில் இதுவரை நான் விளையாடியதில் இது மிகவும் சவாலான ஆடுகளம்...'


இந்த சீசனில் தான் இதுவரை விளையாடிய மிகவும் சவாலான ஆடுகளம். மழைக்குப் பிறகு நானும், விராட் கோலியும் களமிறங்கும்போது அதிகபட்சமாக 140-150 ரன்களை அடிக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தோம். காரணம் அதற்கு முன் ஆடுகளத்தில் நிறைய தண்ணீர் இருந்ததாக நடுவர்கள் சொன்னார்கள். இதையடுத்து, மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது, ​​ராஞ்சி டெஸ்டின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல் இந்த பிட்ச் இருக்கிறது என்று மிட்செல் சான்ட்னரிடம் கூறினேன். ஆனால், இதையும் மீறி இந்த ஆடுகளத்தில் 200 ரன்களை கடந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. எங்கள் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, கடந்த 6 போட்டிகளில்... ஆனால் இந்த ஆடுகளத்தில் அடித்த  ரன்களை எதிரணி அடிக்காமல் பாதுகாப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. 


"மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால், நீங்கள்..."









மகேந்திர சிங் தோனி கிரீஸில் இருந்ததால், நீங்கள் சற்று நேரம் கூட அமைதியாக இருக்க முடியாது. அவர் பலமுறை பினிஷர் வேலையை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் ஈரமான பந்தில் பந்துவீசி நமது பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. இது தவிர, யாஷ் தயாள் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். எனது POTM விருதை யாஷ் தயாளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அவருக்குதான் இது சரியாக இருக்கும், ஈரமான பந்தில் ரன் கொடுக்காமல் இருப்பது அவ்வளவு எளிதானது அல்ல. மேலும் கடந்த 6 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு வந்துவிட்டோம், இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நேரம். இன்று இந்த மகிழ்ச்சியுடன் உறங்க சென்றுவிட்டு, நாளை முதல் நாக் அவுட் போட்டிகளுக்கு தயாராக களமிறங்குவோம்” என்றார்.