சென்னை சூப்பர் கிங்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேற்று அட்டகாசம் செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த வெற்றியின் மூலம் ஃபாப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அனி இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நான்காவது அணி என்ற பெருமையை பெற்றது. 


அதேசமயம் 2024 ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதை அடுத்து அந்த அணியின் ரசிகர்கள் சாலை வீதிகளில் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







ஆண்டுதோறும் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் என்றாலே உற்சாகம்தான். ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பிறகு, அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உள்ளது. இப்படி இருக்க, சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை நடந்த 17 சீசன்களில் தலா 5 முறை கோப்பை வென்றுள்ளன. ஆனால், பெங்களூரு அணி இத்தனை சீசன்களில் பலமுறை பிளே ஆஃப் சுற்றுக்குள்ளும், இரண்டு முறை இறுதிப்போட்டி வரை சென்றும் ஒருமுறை கூட கோப்பையை உயர்த்தியுள்ளது. 






இந்தாண்டு நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்கில் கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதேபோல், ஆண்டுகள் பெங்களூரு அணியும் இந்தமுறை கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் 8 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பதிவு செய்த பெங்களூரு, அடுத்தடுத்து 6 போட்டிகளில் விளையாடி 6லிலும் வெற்றிபெற்றது. இதுவே இந்த சீசனில் பிளே ஆஃப் வரை தற்போது கொண்டு சென்றுள்ளது. 






போட்டி சுருக்கம்: 


வாழ்வா, சாவா என்ற அடிப்படையில் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் களமிறங்கியது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பினை தக்க வைத்திருந்தது. முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். 


அதன் அடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாப் டு பிளேசிஸ் 54 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும் எடுத்திருந்தனர். 


சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்களும், சாண்ட்னர் மற்றும் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட்டையும் எடுத்திருந்தனர். 


201 ரன்கள் எடுத்தால் கூட ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடலாம் என களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.