ஐ.பி.எல் சீசன் 17:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐபிஎல் சீசன் 17. ஏற்கனவே 67 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை, குஜராத், டெல்லி, பஞ்சாப்  மற்றும் லக்னோ ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன.  


கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள ஒரு இடத்திற்காக சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.


அரைசதம் விளாசிய டு பிளெசிஸ்:


பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. அதன்படி அந்த அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி களம் இறங்கினார்கள்.


இதில் 3 ஓவர்கள் வரை பெங்களூரு அணி அதிரடியாக விளையாடியது. அப்போது தீடீரென மழை பெய்தது. இதனால் சில நிமிடங்கள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீட்டும் பேட்டிங்கை தொடங்கியது பெங்களூரு. மழை பெய்ததால் மைதானம் மெதுவாக இருந்தது.


இதனை பயன்படுத்திக் கொண்ட சென்னை அணி 3 ஓவர்களுக்குப்பிறகு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பை கொடுத்தது. இதனால் பெங்களூரு அணி கொஞ்சம் திணற ஆரம்பித்தது. 


பட்டிதர்- கிரீன் அதிரடி:


இதனிடையே விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 29 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 47 ரன்கள் விளாசினார். மறுபுறம் அதிரடியாக அரைசதத்தை பதிவு செய்தார் ஃபாஃப் டு பிளெசிஸ். முன்னதாக அவரது விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்தது. பட்டிதார் ஓங்கி அடிக்க சாண்ட்னர் வீசிய பந்தி ஸ்டெம்பில் பட்டு கிரீசில் நின்ற அவர் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார்.


219 ரன்கள் இலக்கு:


மொத்தம் 39 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 54 ரன்களை விளாசினார். அப்போது களம் இறங்கிய ரஜத் பட்டிதருடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேமரூன் கிரீன். இவர்களது ஜோடி அதிரடியாக விளையாடியது.


அதன்படி 23 பந்துகள் களத்தில் நின்ற ரஜத் பட்டிதர் 2 பவுண்டரிகள் மற்றும்  4 சிக்ஸர்களை பறக்கவிட்டு 41 ரன்களை விளாசி அசத்தினார். மறுபுறம் கேமரூன் கிரீன் உடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். 5 பந்துகள் களத்தில் நின்ற அவர் 1 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் என 14 ரன்கள் எடுத்தார்.


இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்க உள்ளது.