வாழ்க்கையில் எந்தளவு மோசமான சூழலுக்கு சென்றாலும் நாம் மீண்டு வருவதற்கு தன்னம்பிக்கை மிக மிக அவசியமானது ஆகும். அந்த தன்னம்பிக்கை இருந்தால் அதளபாதாளத்திற்கு சென்றாலும் கோபுரத்தின் உச்சிக்கு கூட செல்லலாம். இதை ஆர்.சி.பி. அணி நேற்று நிரூபித்துள்ளனர். 


ஆர்.சி.பி. எதிர்கொண்ட அவமானங்கள்:


ஐ.பி.எல். வரலாற்றில் எந்தவொரு அணியும் சந்திக்காத அளவிற்கு அவமானங்களையும், விமர்சனங்களையும், கேலிகளையும் சந்தித்த அணி என்றால் அது சந்தேகமே இல்லாமல் ஆர்.சி.பி. அணியாகத்தான் இருக்கும். இதுவரை ஆடிய 16 சீசன்களில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றாத ஒரு அணி.


கெயில், டிவிலியர்ஸ், யுவராஜ் என ஜாம்பவான்கள் அந்த அணிக்காக ஆடியிருந்தாலும் ஒரு முறை கூட அவர்கள் கோப்பையை வென்றது கிடையாது. ஆனாலும், அந்த ஆர்.சி.பி.யின் ரசிகர்கள் பலம் என்பது கோப்பையை தலா 5 முறை வென்ற சென்னை மற்றும் மும்பைக்கு நிகரானது. அப்படி இருந்தும் அந்த ஆர்.சி.பி. அணிக்கு ஒவ்வொரு சீசனும் ரசிகர்களின் ஆதரவும், எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே போவதற்கு ஒரே காரணம் விராட் கோலி எனும் மாபெரும் வீரனே ஆகும். 


இறுதி வரை போராடும் குணம்:


இந்திய அணியோ, பெங்களூர் அணியோ எந்த பாகுபாடு இல்லாமல் இறுதிவரை போராடும் அவரது குணத்திற்காகவும், விடாமுயற்சியுடன் அவர் கடைசி வரை வெற்றிக்காக போராடுவதுமே அதற்கு காரணம். யாராலும் முறியடிக்க முடியாத சச்சினின் சாதனையை முறியடித்தவர், தோனிக்கு பிறகு அவர் கட்டமைத்த இந்திய அணியை மேலும் வலுப்படுத்தியவர் என்று பல பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தும் விராட் கோலியின் கையில் ஒரு ஐ.பி.எல். கோப்பை கூட இல்லாதது முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள் என பலரும் கோலியின் திறமை மீது சந்தேகம் கொள்ளும் அளவிற்கு வார்த்தைகளை அவர்கள் வாயில் இருந்து வரவைத்தது. அவரது இந்திய அணியின் கேப்டன்சியும் பறிக்கப்பட்டது. ஐ.பி.எல். கேப்டன்சியையும் தானே துறந்தார். 


மீண்டும் ஒரு வீரனாக கம்பேக் தந்த கோலியின் அசத்தலான பேட்டிங்கை கண்டு அவரை விமர்சித்தவர்கள் வாயடைத்து போனார்கள். அதேசமயம், இந்த சீசனில் முதல் 8 போட்டியில் வெறும் 1 வெற்றி மட்டுமே பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூர் அணியை கேலி செய்யாதவர்களும், விமர்சிக்காதவர்களும் யாருமே இல்லை. முதல் அணியாக நடப்பு தொடரை விட்டு வெளியே செல்ல வேண்டிய அணி ஆர்.சி.பி. என்றே அனைவரும் கருதினர். ஆர்.சி.பி. ரசிகர்கள் கூட அவ்வாறே கருதியிருப்பார்கள். 
ஹாலிவுட் திரைப்படமான தி 300 ஸ்பார்ட்ன்ஸ் திரைப்படத்தில் படத்தின் நாயகனிடம் சரணடைவது அல்லது தோல்வியடைவது மட்டுமே நம் முன் உள்ள முடிவு என்று கூறும்போது, அவர் ஸ்பார்ட்டன்கள் ஒரு போதும் சரண் அடைவதில்லை என்று ஆக்ரோஷத்துடன் கூறுவார். அதேபோல, முடிந்துவிட்டது என்று அனைவரும் நினைத்த கதையை மாற்றி எழுதி சரித்திரம் படைத்துள்ளனர் ஆர்.சி.பி.


நம்பிக்கையை விதைத்த தினேஷ் கார்த்திக்:


மிக மோசமான பவுலிங் கொண்ட அணி என்று இந்த சீசனில் ஆர்.சி.பி.யின் முதல் பாதி ஆட்டங்களின் பவுலிங் இருந்தது. அதற்கு சன்ரைசர்ஸ் அணி எடுத்த 287 ரன்களே உதாரணம். ஆனால், ஆர்.சி.பி. அணி புது ஆர்.சி.பி. அணியாக உருவெடுத்ததும் அதே போட்டியில்தான். நடப்பு தொடரில் 200 ரன்களுக்கு மேல் இலக்கு என்பது சாத்தியமான ஒன்றுதான் என்றாலும், 288 ரன்கள் என்ற இலக்கை டி20 கிரிக்கெட்டில் எட்டிப்பிடிப்பது அசாத்தியமான ஒன்றாகும்.


ஆனாலும், மனம் தளராமல் அந்த போட்டியிங் களமிறங்கியது முதலே பட்டாசாய் வெடித்தனர் ஆர்.சி.பி. பேட்டிங். கோலியும், டுப்ளிசிசும் அதிரடியில் மிரட்ட அடுத்து வந்த வீரர்கள் அவுட்டானார். 122 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற மோசமான நிலைக்குச் சென்ற ஆர்.சி.பி.க்கு நம்பிக்கையை ஆழமாக விதைத்தவர் தினேஷ் கார்த்திக். பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி ஆர்.சி.பி.யை 250 ரன்களை கடக்க வைத்தார். அந்த போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் ஆர்.சி.பி. அணி போராடிய விதம் அவர்களுக்கு மட்டுமின்றி பெங்களூர் ரசிகர்களுக்கும் நம்பிக்கையை விதைத்தது.


நம்ப முடியாத கம்பேக்:


அடுத்த போட்டியில் கொல்கத்தாவிடம் தோற்றாலும், மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராகவே தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியது. அதுவும் அனைவராலும் விமர்சிக்கப்பட்ட பந்துவீச்சை வைத்தே வெற்றி பெற்றது. பேட்டிங்கில் அசுர பலம் கொண்ட சன்ரைசர்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. அங்கிருந்து தொடங்கிய வெற்றியுடன் பஞ்சாப், டெல்லி, குஜராத் என ஒவ்வொரு அணியாக வீழ்த்தி நடப்பு சாம்பியன் சென்னையை நேற்று த்ரில் வெற்றி பெற்றது. 


கிரிக்கெட் ஜாம்பவான்களாக திகழ்ந்த இர்ஃபான் பதான், அம்பத்தி ராயுடு, முகமது கைஃப், ஹைடன் என பலரும் சென்னைதான் முன்னேறும் என்று கூறிக்கொண்டு வந்த நிலையில், அத்தனை பேரின் வார்த்தைகளையும் பொய்யாக்கி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதித்துள்ளது ஆர்.சி.பி. இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடரிலே மிகப்பெரிய கம்பேக் எதுவென்று கேட்டால் நிச்சயமாக இந்த சீசனில் பங்கேற்ற ஆர்.சி.பி. அணியை கூறலாம். எரிந்த சாம்பலில் இருந்து மீண்டு வரும் ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டு வந்துள்ள ஆர்.சி.பி. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட வாழ்த்துகள்.