ஐபிஎல் 2024 இன் 68வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பெங்களூருவின் இந்த வெற்றிக்குப் பிறகு, விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருவரின் கண்களிலும் கண்ணீர் வடித்தனர். இவை ஆனந்தக் கண்ணீர் என்றாலும், இதை பார்க்கும்போது நம் கண்களிலும் கண்ணீர் சுரந்தது. விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் உணர்ச்சிகரமான தருணம் கேமராவில் பதிவாகி, இது தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்குப் பிறகு, ஐபிஎல் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளத்தின் ஒன்றான எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. அதில் முதலில் விராட் கோலி வெற்றிபெற்ற மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தி, அதன் பின்னர் உணர்ச்சிகரமான தருணத்தை முகத்தில் கொண்டு வந்தார். வெற்றிக்கு பிறகு விராட் கோலி தனது ஆரஞ்சு நிற கேப்பை கழற்றி கொண்டாடினார், இதன் போது, அவரது கண்களில் கண்ணீர் பெருகியது.
இதற்கு முன், ஸ்டாண்டில் அமர்ந்திருந்த அனுஷ்கா ஷர்மாவை பார்த்த விராட் கோலி கண்களில் நீருடன் கட்டிபிடிப்பதுபோல் ஸ்டேடியத்தின் நடுவே நிற்க, வெற்றியின் மகிழ்ச்சியில் அனுஷ்கா சர்மாவாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அனுஷ்கா தனது இரண்டு கைகளையும் காற்றில் உயர்த்தி வெற்றியை கொண்டாடினார். இந்த நேரத்தில் அவரது கண்ணில் இருந்தும் கண்ணீர் வடிந்தது. இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தவிர கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்.
போட்டி சுருக்கம்:
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இந்த ஆட்டம் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் அணிக்கு மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடி 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்தார். இது தவிர, விராட் கோலியும் 29 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து இலக்கை துரத்த வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், பிளேஆஃப் சுற்றுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஆனால் பெங்களூரு பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
இதையடுத்து, ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.