IPL 2024, RCB Playoff Scenario: ஐபிஎல் 2024 இன் 62வது லீக் ஆட்டத்தின் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெல்லியின் இந்த வெற்றிக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இது பலனா என்ற கேள்வி வேகமாக எழுந்து வருகிறது. இதற்கு பதில் 'ஆம்' என்றே சொல்லலாம், டெல்லி அணி லக்னோ அணியை தோற்கடித்ததன் மூலம், 16 புள்ளிகளை எட்டவிடாமல் தடுத்தது.  இது ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஏதோ ஒரு வகையில் சாதகமாக அமைந்துள்ளது. இந்தநிலையில், யாருக்கு வாய்ப்பு உள்ளது என்பதையும், பிளேஆஃப்க்கு செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எவ்வளவு எளிதான வாய்ப்புகள் உள்ளது என்பதையும் இப்போது தெரிந்து கொள்வோம். 


ராஜஸ்தான் பிளே ஆஃப்க்கு சென்றது..!


நேற்றைய போட்டியில் டெல்லி அணியின் வெற்றியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலன் கிடைத்தது. டெல்லி வெற்றி பெற்றவுடன் ராஜஸ்தான் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுதவிர, இந்த வெற்றியின் மூலம், பெங்களூருவுக்கு டெல்லி பாதையை எளிதாக்கியுள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, லக்னோவுக்கு எதிராக சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடியது. இதன்மூலம், 14 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி, தலா 7 வெற்றி, தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 


இப்போது அடுத்ததாக பிளே ஆஃப்க்கு செல்ல வாய்ப்புள்ள பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் தலா 14 புள்ளிகளுடன் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், சிறந்த நிகர ரன் ரேட் கொண்ட அணி நான்காவது இடத்திற்கு தகுதி பெறும். தற்போது 14 புள்ளிகளுடன் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில், ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப்க்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், 14 புள்ளிகளை எட்டிய அணிகளில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அடுத்தபடியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிகர ரன்ரேட் சிறப்பாக உள்ளது. வருகின்ற 18ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளது.


இந்த கடைசி போட்டியில் சென்னையை வீழ்த்தினால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம். சென்னைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் பெங்களூரு தோல்வியடைந்தால், பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறுவது உறுதி. எந்த இரண்டு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன என்பது இப்போது சுவாரஸ்யமாக உள்ளது. 


பிளே ஆஃப்க்கு செல்ல பெங்களூரு அணி என்ன செய்ய வேண்டும்..? 


வரும் மே 18ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டிதான் இரண்டு அணிக்கும் வாழ்வா, சாவா போட்டியாக இருக்கும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணியை குறிப்பிட்ட விகிதங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதாவது, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தால், அந்த குறிப்பிட தகுந்த இலக்கை 18.1 ஓவர்களில் விரட்ட வேண்டும். ஒருவேளை பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்த வேண்டும்.