நடப்பு ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. 


தனது சொந்த மைதானத்தில் பேட்டிங்கைத் தொடங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. ஸ்டப்ஸ் மற்றும் போரல் அரைசதம் விளாசினர். 


அதன் பின்னர் இலக்கைத் துரத்த களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் கே.எல். ராகுல், மூன்றாவது ஓவரில் டி காக்கும், ஐந்தாவது ஓவரில் தீபக் ஹூடாவும் தங்களது விக்கெட்டுகளை இஷாந்த் சர்மாவிடம் இழந்து வெளியேறினர். இதற்கிடையில் மார்கஸ் ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை அக்‌ஷர் பட்டேல் பந்தில் இழந்து வெளியேறினார். இதனால் லக்னோ அணி பவர்ப்ளேவிற்குள் தங்களது நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 


ஆட்டத்தின் 8வது ஓவரில் ஆயூஷ் பதோனி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தாலும் லக்னோ அணியின் மிடில் அர்டர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியது மட்டும் இல்லாமல் அணிக்கு நம்பிக்கையும் அளித்து வந்தார். 


ஆனால் இவரும் ஆட்டத்தின் 12வது ஓவரின் முதல் பந்தில் 31 பந்துகளில் 67 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். இவரது விக்கெட்டினை முகேஷ் குமார் கைப்பற்றினார். நிகோலஸ் பூரன் தனது விக்கெட்டினை இழந்த பின்னர் லக்னோ அணியின் நம்பிக்கை முற்றிலுமா சிதைந்தது. 


ஆனால் அடுத்து களமிறங்கிய அர்ஷத் கான் மற்றும் ஏற்கனவே களத்தில் இருந்த குர்னல் பாண்டியா கூட்டணி ஓரளவுக்கு டெல்லி அணியின் பந்து வீச்சினை சமாளித்தது. ஆனால் ஆட்டத்தின் 15வது ஓவரில் குர்னல் பாண்டியா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் டைல் எண்டர் வரிசையில் களமிறங்கிய அர்ஷத் கான் சிறப்பாக விளையாடி தனது அரைசதத்தினை எட்டி அசத்தினார். 


இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் பயணத்தை வெற்றியுடன் முடித்துக் கொண்டது. இதுமட்டும் இல்லாமல் டெல்லி அணி நான்கவது அணியாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் சந்தித்தது. டெல்லி அணியின் ரன்ரேட் மிகவும் மோசமாக உள்ளதால் டெல்லி அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது சிரமம்தான்.