ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. 17வது சீசனாக தொடங்க உள்ள இந்த ஐ.பி.எல். தொடரில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்று ஆர்.சி.பி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
ஆர்.சி.பி.க்கு பெயர் மாற்றம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை மாற்றப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஆர்.சி.பி. அணிக்கு ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயர் இன்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகளிர் ஆர்.சி.பி. அணியின் கேப்டனும். மகளிர் பிரிமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் தந்த ஸ்மிரிதி மந்தனாவும், ஆடவர் ஆர்.சி.பி. அணியின் கேப்டன் டுப்ளிசிசும், ஆர்.சி.பி. அணியின் நட்சத்திர மற்றும் முன்னாள் கேப்டனான விராட் கோலியும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்மிரிதி மந்தனா, டுப்ளிசிஸ் மற்றும் விராட் கோலி ரசிகர்கள் முன்பு பேசினர். பின்னர், புதிய ஜெர்ஸியுடன் அவர்கள் காட்சி தந்தனர். ஆர்.சி.பி. அணிக்கு புதிய லோகோவும் உருவாக்கப்பட்டுள்ளது. புது உத்வேகத்துடன் களமிறங்கும் ஆர்.சி.பி. அணிக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் விதத்தில் புதிய ஜெர்ஸி, புதிய லோகோ மற்றும் புதிய பெயர் அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் விராட் கோலி பேசத் தொடங்கும் முன்பு, மைதானத்தில் குழுமியிருந்த விராட் கோலி ரசிகர்கள் கோலி.. கோலி என்று ஆர்ப்பரித்தனர்.
ரசிகர்கள் ஆரவாரம்:
அப்போது, பேசிய விராட் கோலி சென்னைக்கு நாங்கள் இன்றிரவே புறப்பட வேண்டும். விமானங்கள் குறைவாக உள்ளது என்று ரசிகர்களிடம் தான் பேசுவதற்கு நேரம் தாருங்கள் என்று சிரித்துக் கொண்டே பேசினார். பின்னர். கன்னடத்தில் சில வார்த்தை பேசினார்.
மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருப்பதால் ஆர்.சி.பி. ரசிகர்கள் படு உற்சாகத்தில் உள்ளனர். முதல் சீசன் முதல் விளையாடி வரும் பெங்களூர் அணி இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஒரு முறை கூட ஐ.பி.எல். தொடரில் கோப்பையை வெல்லவிட்டாலும் மும்பை மற்றும் சென்னை அணிக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட ஒரு அணி பெங்களூர் அணியாகும்.
மேலும் படிக்க: IPL 2024: ரோகித் சர்மா எனது தோளில் கைபோட்டு இந்த தொடர் முழுவதும் என்னுடனே இருப்பார் - ஹர்திக் பாண்டியா!
மேலும் படிக்க: Watch Video: மும்பை கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கியது ஏன்..? செய்தியாளர்கள் சந்திப்பில் மௌனம் காத்த ஹர்திக்!