கடந்த 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்ற ரோஹித் சர்மா, 2024 முதல் மீண்டும் பேட்ஸ்மேனாக தனது பயணத்தை கடக்க இருக்கிறார். மும்பை அணியை 5 முறை சாம்பியனாக்கிய ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2024க்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்தி பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மௌனம் காத்த ஹர்திக் பாண்டியா: 


மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பெற்ற பிறகு, ஹர்திக் பாண்டியா முதன்முறையாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது ஹர்திக் பாண்டியா மற்றும் தலைமை பயிற்சியாளர் பவுச்சரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் ஹர்திக் பாண்டியாவால் பதில் அளிக்க முடியவில்லை. அந்த கேள்வி என்னவென்றால், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி வழங்க நிர்வாகம் முடிவு செய்ததற்கான காரணம் என்ன என்பதுதான். 


கேள்வி - பதில்கள்: 






இந்த கேள்விக்கு ஹர்திக் பாண்டியா மௌனம் காக்க, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பவுச்சரும் பதில் அளிக்காமல் அடுத்த கேள்வியை கேட்கும்படி தெரிவித்தார். தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா, “ யார் கேப்டனாக இருந்தாலும் அதில் எந்தவொரு வித்தியாசமும் இருக்க போவதில்லை, ஏனென்றால் எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், ரோஹித் இருப்பார். அவரது கேப்டன்சியில் மும்பை அணி சாதித்தை இப்போது நான் முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். எனது முழு வாழக்கையையும் அவரது கேப்டன்சியின் கீழ் விளையாடியுள்ளேன். சீசன் முழுவதும் ரோகித் சர்மாவின் கை எப்போதும் என் தோளில் இருக்கும் என்பது எனக்கு தெரியும்” என்றார்.


கேப்டன் பதவியில் இருந்து ரோஹித்தை நீக்கியதால் ரசிகர்களின் கோபம் குறித்து பாண்டியாவிடம் கேட்டபோது, ​​" உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அதே நேரத்தில், நாங்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்துவோம். அவர்கள் எங்கள் மீது கோபப்பட எல்லா உரிமையும் உண்டு.” என்றார். 


கடந்த ஆண்டு இந்திய மண்ணில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பையின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் மைதானத்தில் இருந்து விலகி இருக்க வேண்டியிருந்தது. தனது உடற்தகுதி குறித்து பாண்டியா கூறுகையில், "எனது உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை. அனைத்து போட்டிகளிலும் விளையாட திட்டமிட்டுள்ளேன். ஐபிஎல்-ல் எப்படியும் பல போட்டிகளை தவறவிட மாட்டேன். காயம் காரணமாக மூன்று மாதங்கள் அவுட்டாக இருந்தேன். ஒரு வினோதமான காயம். நான் பந்தை நிறுத்த முயன்றேன், காயம் அடைந்தேன்" என்றார்.


ரோஹித் சர்மாவின் பேட்டிங் திறன் குறித்து தலைமை பயிற்சியாளர் பவுச்சர், “ரோஹித் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ரோஹித் தன்னை வெளிப்படுத்துவதற்காக காத்திருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராக அவர் பேட்டிங் செய்வதை பார்த்தோம். அவர் அற்புதமாக பேட்டிங் செய்கிறார்" என்றார்.